தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்தது 250 முதல் 300 படங்கள் வெளியாகின்றன.
ஆனால், அதில் வெகு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. சில படங்கள் லாபமும் இல்லை நட்டமும் இல்லை ரகத்தில் தயாரிப்பாளரை காப்பற்றி விடுகின்றன. ஆனால், பல படங்கள் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விடுகின்றன.
ஒரு ஷோ மட்டுமே ஓடும் படங்கள், ஒரு ஷோ கூட திரையிட முடியாதபடி பெட்டிக்குள்ளேயே தூங்கும் படங்கள் என பட்டியல் நீள்வது வாடிக்கை. இந்நிலையில், இந்த வருடத்தின் துவக்கத்திலேயே ரஜினியின் "பேட்ட" மற்றும் அஜித்தின் "விஸ்வாசம்" என பாக்ஸ் ஆஃபிசை கதற விட்டன. அதனை தொடர்ந்து வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இந்நிலையில், இந்த வருடத்தில் பேட்ட, விஸ்வாசம், தடம், காஞ்சனா-3 என நான்கே நான்கு படங்கள் தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கொடுத்தவை என்று பிரபல நியோகஸ்தார் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.


