பிரபல பின்னணி பாடகி கல்பனா அவர்கள் தூக்க மாத்திரை அதிகமாக எடுத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் நிஜம்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கல்பனா, சில நாட்களாக கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் மற்றும் சங்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா சுயநினைவு இன்றி இருந்ததை கண்டனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் பரிசோதனையில், கல்பனா அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டது தெரிய வந்தது. முதலில் தற்கொலை முயற்சி என சந்தேகம் எழுந்த நிலையில், கல்பனா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சரியாக தூக்கம் வராததால் அதிக மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலில் எட்டு மாத்திரைகள் எடுத்தும் தூக்கம் வராததால் மேலும் பத்து மாத்திரைகள் எடுத்ததாகவும், அதன் பிறகு என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றும் கல்பனா தெரிவித்துள்ளார்.
கல்பனாவின் மகள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "அம்மா இப்போது நலமாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குடும்பத்தில் எந்த மனஸ்தாபமும் இல்லை. அம்மா மன அழுத்தத்திற்காக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தூக்க மாத்திரைகள் எடுத்து வருகிறார்.
அது ஓவர் டோஸ் ஆகிவிட்டது. தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை. தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார். மருத்துவமனை வட்டாரங்கள் கல்பனா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உடல் நலம் பெற்று வீடு திரும்பிய பாடகி கல்பனா வெளியிட்ட வீடியோவில், எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை என்று ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை.
என் கணவர் தான் என் உயிரை காப்பாற்றியது. நான் அதிக அளவில் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு மயக்கமான நிலையில் என் கணவர் தான் வெளிநாட்டில் இருந்து போலீஸ் உதவியுடன் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று என் உயிரை காப்பாற்றினார்.
நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன். என்னுடைய மகளுக்கு ஒரு நல்ல தந்தை அவர். அதனால், எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை. நான் தற்கொலை முயற்சி செய்து கொண்டேன் என்ற தகவல்களை நம்ப வேண்டாம் என வீடியோ வெளியிட்டுள்ளார். பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
அவரது தந்தை டி.எஸ். ராகவேந்தர் ஒரு நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். அவரது தாயார் சுலோச்சனாவும் ஒரு பின்னணி பாடகி. கல்பனா இதுவரை 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவர் அதிகளவிலான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டதற்கான உண்மையான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்றும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.