80-களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகை சுஹாசினி, தனக்கு காசநோய் பாதிப்பு இருந்ததாகவும், அதிலிருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் சமீபத்தில் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தாலும், எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்தவர் சுஹாசினி. நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகளான இவர், இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி என்பது பலரும் அறிந்ததே.
சினிமா பின்புலம் இருந்தாலும், தனது படங்களில் அதிக கவர்ச்சி காட்டாததால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கதாநாயகியாக மட்டுமல்லாமல், வில்லியாகவும், சைக்கோ கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்திய சுஹாசினி தற்போது தனது உடல்நலம் குறித்து பகிர்ந்துகொண்ட விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, சுஹாசினிக்கு ஆறு வயதில் இருக்கும்போதே காசநோய் பாதித்திருக்கிறது. அதற்கு சிகிச்சை எடுத்து சிறு வயதிலேயே குணமடைந்தார். அந்த பிரச்சனை அதோடு முடிந்துவிட்டது என்று அவரும், அவரது குடும்பத்தினரும் நினைத்திருந்த நிலையில், 36 வயதில் மீண்டும் அவருக்கு காசநோய் பாதித்தது.
இதனால் உடல் எடை அதிகரித்ததுடன், காதும் சரியாக கேட்காமல் போயிருக்கிறது. பின்னர் ஆறு மாதங்கள் தீவிர சிகிச்சை எடுத்த பிறகு காசநோயின் தாக்கத்திலிருந்து அவர் வெளியே வந்தார். அந்த சமயத்தில் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கவுரவ குறைச்சல் என்று நினைத்து அவர் மறைத்திருக்கிறார்.
ஆனால் இப்போது தான் செய்தது தவறு என்று உணர்ந்ததாகவும், இது பற்றிய விழிப்புணர்வை பலருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நோய் வந்தால் அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும், யாரும் வெட்கப்பட்டு மனமுடைந்து இருக்கக் கூடாது என்றும், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும் என்றும் சுஹாசினி அறிவுரை வழங்கியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல், 1995-ல் வெளியான 'இந்திரா' திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் சுஹாசினி திகழ்ந்தார். அதுமட்டுமின்றி, தனது கணவர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவராகவும் அவர் இருக்கிறார்.
சுஹாசினி - மணிரத்தினம் தம்பதிக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார். திரை உலகை சார்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் மகனை வெளிச்சம் படாமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.
மகன் எதிர்காலத்தில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ வருவாரா என்ற கேள்விக்கு, அது அவருடைய விருப்பம் தான் என்றும், அதில் தங்கள் தலையீடு இருக்காது என்றும் சுஹாசினி பதிலளித்துள்ளார். சுஹாசினியின் இந்த வெளிப்படையான பேச்சு பலருக்கும் தைரியத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.