சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "எதிர்நீச்சல்" சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ஹரிப்பிரியா.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் மிகவும் உணர்ச்சிவசமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "கடைசி வரைக்கும் கூட வருவேன் என்று நம்பிக்கை கொடுத்துட்டு சிலர் தூக்கிப்போட்டுறாங்க" என்று அவர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
ஆரம்பத்தில் "ஆபீஸ்" என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஹரிப்பிரியா, முதல் தொடரிலேயே கதாநாயகியாக நடித்தார். பின்னர் சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்திருந்தாலும், "எதிர்நீச்சல்" சீரியலில் நந்தினி கதாபாத்திரம்தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது.
இந்த சீரியலில் நந்தினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது கலகலப்பான நையாண்டிகளும், டைமிங் காமெடியும் பலருக்கும் மிகவும் பிடிக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு அவர் பேசும் வார்த்தைகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் ஹரிப்பிரியாவுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் அவர் பேசியதாவது, "பொதுவாக ஒரு பெண்ணை நீ உன்னுடைய திறமையில் ஜெயித்துவிட்டு வா என்று அனுப்பிவிட்டு பாருங்கள், அந்த பெண் அவ்வளவு சாதனைகளை செய்வார்கள். உனக்காக நான் இருக்கிறேன், உன் கூடவே கடைசி வரைக்கும் வருவேன், நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று ஏமாற்றி விட்டு கடைசியில் விட்டுட்டு போய் விடாதீர்கள்.
பெண்களுக்கு நீங்கள் தான் எப்போதும் தைரியம் என்று சொல்லி வளருங்கள். அடுத்தவர்களை சார்ந்து இருக்காமல் இருப்பதே ரொம்பவும் நல்லது. என்னுடைய வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை நான் சந்தித்திருக்கிறேன்.
ஆனாலும் ஓடிக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் என்னுடைய மகன் தான். அம்மா என்ற உறவு, நான் அம்மா என்ற ஸ்தானத்தில் இருப்பதாலேயே என்னுடைய மகனுக்காக நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
என்னுடைய உடம்பில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஒரு படத்தில் தாடி பாலாஜி சொல்லுவாரு நின்னா வலிக்குது உட்கார்ந்தா வலிக்குது என்று, அதுபோல உடம்பில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை விதமான பிரச்சனைகள் இருக்கிறது.
ஆனாலும் நான் ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மகன் மீது வைத்திருக்கும் அன்பும் காதலும் தான். அதுபோல இந்த சீரியலில் இருந்து நான் விலகி விடுகிறேன் என்று இந்த நிகழ்ச்சியில் கூட இயக்குனர் திருச்செல்வத்திடம் சொன்னேன்.
இதுபோல பலமுறை நான் சொல்லி இருக்கிறேன், அந்த அளவிற்கு உடலில் பிரச்சனை. ஆனாலும் ஒரு சிலருடைய அன்பு நம்மை மீண்டும் எழுந்து ஓட வைத்து விடுகிறது. அது போல தான் நானும் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறேன்" என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.
ஹரிப்பிரியாவின் இந்த உருக்கமான பேச்சு இணையத்தில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு ஆறுதல் கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.