கோலிவுட்டின் முன்னணி காமெடியன்களில் ஒருவரான நடிகர் யோகி பாபு, தற்போது அஜித், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார்.
அதுமட்டுமின்றி, ‘போட்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ‘Medical Miracle’, ‘ராஜா சாப்’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு, சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘தர்பார்’ படத்தில் இருந்து ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறிய யோகி பாபு, “நான் ரஜினி சாரை நான்கு முறை சந்தித்திருக்கிறேன். நெல்சன் திலீப்குமாருடன் நான் இருக்கும்போது, ரஜினி சார் வந்து, ‘கோலமாவு கோகிலா’ படத்தை நான்கு முறை பார்த்தேன் என்று சொல்வார்.
‘மண்டேலா’ படத்தையும் பார்த்ததாகப் பாராட்டுவார். இந்த இரண்டு படங்களில் எனது நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேநேரம், ரஜினிகாந்தின் நேர்மையான விமர்சனத்தையும் யோகி பாபு பகிர்ந்தார்.
“நான் நடித்த வேறு சில படங்களைப் பார்த்துவிட்டு, ‘கொஞ்சம் அப்படி இருந்தது’ என்று ரஜினி சார் கூறுவார். உடனே எனக்கு ‘அய்யயோ, காறி துப்பிட்டாரே’ என்று தோன்றும்,” என்று நகைச்சுவையாகக் கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
ரஜினியின் இந்த பாராட்டும், நேர்மையான கருத்தும் யோகி பாபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யோகி பாபுவின் இந்த பேட்டி, ரஜினிகாந்தின் எளிமையையும், கலைஞர்களை மதிக்கும் பண்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பரவி, இருவருக்கும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.