மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.! - எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இவர், தனக்கு வழங்கப்பட்ட அரசு வாகனம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதனால் அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியதாக இருந்ததாகவும் கூறி, அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

சுந்தரேசன், இது உயர் அதிகாரிகளின் பழிவாங்கல் நடவடிக்கை என்று குற்றம்சாட்டினார். 1996-ம் ஆண்டு பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர், மயிலாடுதுறையில் கடந்த நவம்பர் முதல் 1,200 மதுவிலக்கு வழக்குகளை பதிவு செய்து, 700 பேரை கைது செய்து, 23 சட்டவிரோத மதுக்கடைகளை மூடியுள்ளார். 

ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வாகனம் பழுது காரணமாக எடுக்கப்பட்டதாகவும், மாற்று வாகனம் வழங்கப்பட்டதாகவும் மறுப்பு தெரிவித்தார். 

சுந்தரேசனின் ஊடகப் பேட்டிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள், 1973-ஐ மீறியதாகக் கருதப்பட்டு, தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நடத்திய விசாரணையில், அவர் மீது காவல்துறை ஒழுங்கு மீறல் குற்றச்சாட்டுகள் உறுதியானதாகக் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, சுந்தரேசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது 3(a), 3(b) பிரிவுகளின் கீழ் நான்கு மெமோக்கள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விவகாரம், காவல்துறையில் நேர்மையான அதிகாரிகளுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : Mayiladuthurai DSP Sundaresan was suspended after alleging harassment by senior officials, including the seizure of his official vehicle, forcing him to walk to work. His viral video and media statements violated conduct rules, leading to a DIG-led inquiry and suspension by SP Stalin.