புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் (வயது 35), ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர். இவருக்கு முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, இரண்டாவதாக சௌந்தர்யாவை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

ஆனால், அறிவழகனின் மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகத்தால், அவரது மனைவி சௌந்தர்யாவின் கள்ளக்காதல் மற்றும் கொலைச் சதி அம்பலமாகியுள்ளது.
சம்பவத்தன்று, மது அருந்திவிட்டு மாமிசம் சாப்பிட்ட அறிவழகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சௌந்தர்யா தெரிவித்தார். இதனை நம்பிய உறவினர்கள், அறிவழகனின் உடலை குளிப்பாட்டி, சடங்குகளை முடித்து அடக்கம் செய்தனர். ஆனால், அறிவழகனின் கழுத்தில் காணப்பட்ட வரிவரியான காயங்கள் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், ஆரம்பத்தில் இதனை பெரிதுபடுத்தாமல் அடக்கம் செய்தனர்.அடக்கத்திற்குப் பிறகும் காயங்கள் குறித்த சந்தேகம் உறவினர்களை உறுத்த, அறிவழகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
இதனைக் கேள்விப்பட்ட சௌந்தர்யாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டது. அவரது நடத்தையில் எழுந்த சந்தேகத்தால், உறவினர்கள் செல்போனில் கால் ரெக்கார்டை ஆன் செய்து சௌந்தர்யாவிடம் கொடுத்தனர். அப்போது, தனது பெற்றோருக்கு போன் செய்த சௌந்தர்யா, “நான்தான் கொன்னேன், என்னை வந்து கூட்டிட்டு போங்க” என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ந்த உறவினர்கள், சௌந்தர்யாவை விசாரித்தபோது, அறிவழகனின் நண்பர் பாலு இந்தக் கொலையைச் செய்ததாகவும், தனக்கு இதில் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.போலீசார் நடத்திய விசாரணையில், அறிவழகனும் பாலுவும் நண்பர்களாக இருந்து, ஒன்றாக வேலைக்குச் சென்று மது அருந்துவது வழக்கமாக இருந்தது தெரியவந்தது.
அறிவழகன், பாலுவை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உபசரித்திருக்கிறார். ஆனால், இந்த நட்பை தவறாகப் பயன்படுத்திய பாலு, அறிவழகனின் மனைவி சௌந்தர்யாவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரகசிய உறவில் இருந்துள்ளார்.
இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்து, அறிவழகனை அகற்ற திட்டமிட்டனர்.சம்பவத்தன்று, சௌந்தர்யா தனது கள்ளக்காதலன் பாலுவை வீட்டுக்கு அழைத்தார். அசந்து தூங்கிய அறிவழகனின் கழுத்தை கேபிள் ஒயரால் இறுக்கி கொலை செய்தனர்.

பின்னர், மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடி உறவினர்களை ஏமாற்றினர். விசாரணையில் இந்த உண்மைகள் வெளிவந்ததையடுத்து, போலீசார் அறிவழகனின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சௌந்தர்யாவையும் பாலுவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்தச் சம்பவம் குன்றாண்டார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary : In Pudukkottai, Arivalagan was killed by his wife Soundarya and her lover Palu. Initially claimed as a heart attack, suspicious neck marks led relatives to uncover Soundarya's confession via a recorded call. Police investigations revealed their affair and planned murder. Both were arrested.
