குறைதீர்ப்பு கூட்டத்திற்கு நிறைமாத கர்ப்பிணி போன்று வந்த பாட்டி.. விசாரித்த ஆட்சியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து ஐஏஎஸ் படித்து ஆட்சியராக பணியாற்றி வருபவர், ஒரு குறைத்தீர்ப்பு கூட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

கிராமத்து எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயதான பாட்டி, ₹1000 மகளிர் உரிமைத் தொகை கோரி மனுவுடன் கூட்டத்திற்கு வந்திருந்தார். அவரது வயிறு கர்ப்பிணி பெண்ணைப் போல மிகப் பெரிதாக இருந்ததை கவனித்த கலெக்டர் பிரியங்கா, "அம்மா, உங்கள் வயிறு ஏன் இவ்வளவு பெரிதாக உள்ளது? என்ன பிரச்சனை?" என விசாரித்தார்.

முதலில் தயங்கிய பாட்டி, பின்னர் சாம்பல் சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், ஏழ்மை காரணமாக சிகிச்சை பெற முடியவில்லை என்றும் கூறினார். 

குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்து, உரிமைத் தொகை மட்டுமே வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், கலெக்டர் பிரியங்கா இதை ஏற்காமல், அவர்களை உறுதியுடன் சம்மதிக்க வைத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை டீனுக்கு தொடர்பு கொண்டு பாட்டியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

பாட்டியின் குடும்பத்திற்கு போதிய ஆதரவு இல்லாததால், மாவட்ட நிர்வாகம் சமூக நலத்துறை மூலம் வானவில் மைய ஊழியர்களை 24 மணி நேரமும் பாட்டிக்கு உதவியாக நியமித்தது. 

முதல் ஸ்கேன் பரிசோதனையில் 15 கிலோ கட்டி இருப்பது தெரியவந்தது. ஆனால், அறுவை சிகிச்சையில் 30 கிலோ எடையுள்ள மாபெரும் கட்டி அகற்றப்பட்டது, இது தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக நீக்கப்பட்ட மிகப்பெரிய கட்டியாக பதிவானது.

ஆச்சரியமூட்டும் வகையில், இந்த பாட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர் என்பது தெரியவந்தது. பல ஆண்டுகளாக வயிற்றில் கட்டி வளர்ந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி, இயல்பான இயக்கம் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். 

ஆட்டோ அல்லது பேருந்தில் கூட பயணிக்க முடியாத அளவுக்கு மோசமான நிலையில், டாட்டா ஏஸ் வாகனத்தில் கலெக்டரகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கலெக்டர் பிரியங்காவின் முயற்சியால், அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இந்த பாட்டிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. அவர் கோரிய மகளிர் உரிமைத் தொகையும் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


எளிய குடும்பத்தில் இருந்து வந்த கலெக்டர் பிரியங்கா, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தி, ஒரு சாமானிய பாட்டிக்கு புதுவாழ்வு அளித்த இந்த சம்பவம், தமிழக அரசு எளிய மக்களை ஆட்சியர்களாக தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏற்படும் மாற்றத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த மனிதநேய செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Summary : At a Thanjavur grievance meeting, Collector Priyanka noticed an elderly woman with a large abdomen resembling pregnancy. Despite initial reluctance, she ensured medical intervention, revealing a 30kg tumor. The woman, a PhD scholar, received treatment and rehabilitation, showcasing Priyanka’s compassionate governance for the underprivileged.