கோவை வடவள்ளி பொங்காளியூரில் வாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணிடமிருந்து 1 கோடியே 20 லட்ச ரூபாயை வீட்டின் உரிமையாளர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், வீட்டு உரிமையாளரான வேல்முருகன் (41) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வடவள்ளி பொங்காளியூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணனின் மனைவி பிரியா குடியிருந்து வந்தார்.

இவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த தங்களுக்கு சொந்தமான சொத்தை சமீபத்தில் 3 கோடியே 24 லட்ச ரூபாய்க்கு விற்று, அதில் கடன்கள் மற்றும் செலவுகள் போக மீதமிருந்த 1 கோடியே 20 லட்ச ரூபாயை வீட்டில் வைத்திருந்தார்.
நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பிய பிரியா, படுக்கையறையில் துணிகள் கலைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பரிசோதனையில், பெட்டியில் இருந்த 1.2 கோடி ரூபாய் மாயமானது தெரியவந்தது.
உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் கொள்ளை நடந்தது குறித்து ஆய்வு செய்தனர்.
எதிர் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவை ஆராய்ந்தபோது, ஒரு நபர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்து செல்வதும், பின்னர் பணப்பையுடன் செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த நபர் வீட்டு உரிமையாளர் வேல்முருகன் என பிரியா அடையாளம் காட்டினார்.
வேல்முருகன், இடையர் பாளையத்தைச் சேர்ந்தவர். ட்ரெய்லரிங் தொழில் செய்து வரும் இவர், வங்கிக் கடன் மூலம் வடவள்ளி பகுதியில் வீடு கட்டி, அதை வாடகைக்கு விட்டு கடனை அடைக்க திட்டமிட்டிருந்தார்.
இதற்காக ஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் பிரியா 20 லட்ச ரூபாய் லீஸ் தொகைக்கு வீட்டை எடுத்தார். ஆனால், பிரியா 30-க்கும் மேற்பட்ட பூனைகள் மற்றும் நாய்களை வளர்த்து வந்ததால், வீடு அசுத்தமாகிவிடும் எனக் கருதிய வேல்முருகன், வீட்டைக் காலி செய்யுமாறு வற்புறுத்தினார்.
இதற்கு ஒப்பந்தத்தை மீற முடியாது என பிரியா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. இறுதியாக, 20 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்தால் வீட்டைக் காலி செய்வதாக பிரியா ஒப்புக்கொண்டார்.
வேல்முருகன் லீஸ் தொகையை கடனை அடைக்க பயன்படுத்தியதால், வீட்டை வேறு நபர்களுக்கு லீஸ் கொடுத்து பணத்தை திருப்பித் தர திட்டமிட்டார். ஆனால், பிரியா வீட்டைப் பார்க்க வருவோரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்தார்.
இதனால் மனவிரக்தியடைந்த வேல்முருகன், வீட்டை புகைப்படம் எடுக்க வந்தபோது, பிரியா இல்லாத நேரத்தில் பின்கதவு சாவி மூலம் உள்ளே நுழைந்தார். படுக்கையறையில் இருந்த பெட்டியில் 1.2 கோடி ரூபாயைக் கண்டறிந்து, அதைத் திருடி, தனது தையல் கடையில் பணியாற்றும் பெண்ணின் வீட்டில் மறைத்து வைத்தார்.
காவல்துறையினர் சிசிடிவி ஆதாரங்களுடன் வேல்முருகனை கைது செய்து, திருடப்பட்ட பணத்தை மீட்டனர். வாடகை வீட்டைக் காலி செய்ய முடியாமல் தவித்த வீட்டு உரிமையாளர், 1.2 கோடி ரூபாய் திருடி சிறை சென்ற இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary: In Coimbatore, landlord Velmurugan stole ₹1.2 crore from tenant Priya, a Supreme Court lawyer’s wife, after she refused to vacate his leased house. CCTV footage revealed his theft, leading to his arrest and recovery of the money, causing a stir in Vadavalli.

