இட்லி கடை இம்சைகள்.. காலியான தியேட்டர்கள்.. காட்சிகள் ரத்தானது ஏன்..? காந்தாராவின் தாக்கமா..?

சென்னை, அக்டோபர் 3 : தனுஷ் இயக்கி, நடித்து, தயாரித்த 'இட்லி கடை' படம் தமிழகம் முழுவதும் பெருவாரியாக வெளியான முதல் நாளே படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் ரசிகர்கள் கூட்டம் மண்டியும் திரையரங்குகளில் இம்முறை கூட்டம் குறைவாகவே இருந்ததாக தெரிகிறது.

இருப்பினும், படத்தின் தரம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் ரசிகர்கள் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தனுஷின் முதல் இயக்குநர் படமாக எதிர்பார்ப்புகளுடன் வெளியான 'இட்லி கடை', குடும்ப ரசிகர்களை கவரும் காமெடி-டிராமா என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், வெளியீட்டு நாள் (அக்டோபர் 2) சில இடங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

சென்னையின் பிரபல ரோகிணி திரையரங்கில் (கோயம்பேடு), படம் பார்க்க வருபவர்களுக்கு இட்லி வழங்கி அழைத்தனர். ஆனால், வழக்கமான ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் திரையரங்கம் வெறிச்சோடியாகக் காணப்பட்டது. காலாண்டு விடுமுறை காரணமாக சென்னை நகரில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு பயணித்திருக்கலாம் என்கிறது திரையரங்கு வட்டாரம்.இந்த ஏமாற்றம் சென்னைக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் பரவியது.

கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் உள்ள பெரிய திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் திரையிடல் நடந்தது. உச்சக்கட்டமாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள யாழணி சினிமாஸ் திரையரங்கில் 300 இருக்கைகள் இருந்தபோதிலும், 40 பேர் மட்டுமே படத்தைப் பார்த்தனர்.

மற்ற இரு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சமூக ஊடகங்களில் இது குறித்து நெட்டிசன்கள் கலாய்ப்பது தொடங்கியுள்ளது. "தியேட்டர் வாசலில் 'இட்லி கடை' என்ற பெயரைப் பார்த்ததும், ஏதோ புதிய ஹோட்டல் திறந்துவிட்டார்கள் என்று நினைத்து பார்வையாளர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்களோ?" என்று கமெண்ட்கள் அடித்து வைரலாகி வருகின்றன.

இதற்கிடையில், 'கந்தாரா 2' படம் சில சிறிய திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டதால் 'இட்லி கடை'க்கு பெரிய பாதிப்பு இல்லை என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். மேலும், படத்தைப் பார்த்தவர்களிடமிருந்து வந்திருக்கும் முதல் ரிவ்யூக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை பகுதியில் இருந்து வந்த ஒரு ரசிகர், "சூப்பரா இருக்குமா! ஐ திங்க தனுஷ் பிரதருக்கு தான் எல்லா கிரெடிட்டும் போனோம். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இப்பதான் தியேட்டர் முடிச்சிட்டு வந்தோம். எல்லாருமே ரொம்ப அப்படி ரெஸ்பான்ஸ் இருக்கு. ஐ திங்க குடும்பமா பார்க்கற ஒரு படமா, எல்லாருமே பயங்கரமா அப்ரிஷயேட் பண்றாங்க. பபீல் குட் பிலிம்ன்றாங்க" என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

மாலை காட்சிகளில் சென்னை திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை அதிகரித்ததாகவும், வரும் நாட்களில் படம் நல்ல திரளாக ரசிகர்களை ஈர்க்கும் எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

தனுஷின் இந்த புதுமுயற்சி, ஆரம்பத்தில் சவால்களை எதிர்கொண்டாலும், படத்தின் உள்ளடக்கம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு இதற்கான அதிகாரப்பூர்வ கருத்தை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary : Dhanush's directorial debut 'Idli Kadai' shocked its team with low opening day footfalls across Tamil Nadu, including empty halls at Chennai's Rohini and just 40 viewers at Sivaganga's Yezhini Cinemas. Netizens mocked the title as a hotel name, but positive family-friendly reviews are surging, with evening shows seeing upticks and theater owners optimistic for future crowds.