மும்பை: மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள ஒரு ஹோட்டலில், தனது 40 வயது பெண் தோழியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்த 61 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்த முதியவர் வொர்லி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணியளவில் அந்தப் பெண்ணுடன் ஹோட்டலுக்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அப்பெண் ஹோட்டல் வரவேற்பறையைத் தொடர்பு கொண்டு உடன் வந்தவர் திடீரென மயங்கி விட்டார் எனத் தெரிவித்தார்.

உடனடியாக ஹோட்டல் ஊழியர்கள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்து விட்டு, உடனே குர்லா காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து முதியவரை சியோன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், போலீஸார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில், மது பாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்ததை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து, அந்த 40 வயது பெண்ணை குர்லா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பெண் கூறியதாவது, அவர் தனது காதலர் என்றும், உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டே மது அருந்தினார் என்றும் அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தார்.
மரணத்துக்கான சரியான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் விபத்து மரணம் (Accidental Death Report) என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் அவர் உடலுறவுக்கு முன் ஏதேனும் மாத்திரைகளை உட்கொண்டாரா என்பதை உறுதிப்படுத்த காத்திருப்பதாக குர்லா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary in English : A 61-year-old man from Mumbai's Worli died after collapsing during intercourse with his 40-year-old girlfriend in a Kurla hotel. He fainted while attempting to drink alcohol. Taken to Sion hospital, he was declared dead on arrival. Police registered an accidental death case, awaiting postmortem to determine cause, including possible tablet consumption.

