சென்னை, டிசம்பர் 9 : சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில், ஸ்கேன் எடுக்க வந்த 47 வயது பெண்ணிடம் லேப் டெக்னீசியன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்திருப்பதால், அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்க வந்தபோது, ஸ்கேன் செய்து கொண்டிருந்த லேப் டெக்னீசியன் கவின் என்பவர் தனிமையில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். உடனடியாக கத்திய பெண்ணை மற்ற ஊழியர்கள் மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், கொளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கவினை கைது செய்தனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது ஆளும் திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் நிலையில், இப்போது மருத்துவ ஸ்கேன் சென்டர் போன்ற “மிகவும் பாதுகாப்பான” இடத்தில்கூட பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் உள்ளிட்டோர் தொடர்ந்து “தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இச்சம்பவம் அவர்களது வாதத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
“எந்த நம்பிக்கையில், எந்த தைரியத்தில் இப்படி ஒரு பெண்ணிடம் அத்துமீற முடிகிறது? மருத்துவமனை, ஸ்கேன் சென்டர் போன்ற இடங்களில்கூட பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், எங்கு செல்வது?” என்று பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது.
இச்சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆர்த்தி ஸ்கேன் சென்டர் நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஆளும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வந்த நிலையில், முதல்வரின் தொகுதியிலேயே நடந்த இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary : A 47-year-old woman was sexually assaulted by lab technician Kavin inside Aarthi Scan Centre in Kolathur-Retteri, Chennai (Tamil Nadu CM’s constituency). The accused was arrested under the Women Harassment Prevention Act following the victim’s husband’s complaint. The incident has sparked outrage over women’s safety in Tamil Nadu.

