இலங்கை முழுவதும் கனமழையும் நிலச்சரிவுகள் தாக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் கொடூரமான நேரத்தில்... ஒரு சிறிய கிராமத்தில் நடந்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அதிசயம்.
பதுளை மாவட்டம், மஸ்பன்ன பகுதி.மலைச் சரிவில் அமைந்த சிறிய கிராமம்.அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற வனப் பாதுகாவன் அதிகாரி டி.எம். தென்னகோனின் வீட்டில் வளரும் நாய்க்குப் பெயர் “சூட்டி”.

கடந்த நவம்பர் 28 இரவு. மழை கொட்டித் தீர்க்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்தது. சாலைகள் அடைபட்டன. கிராமமே தனிமைப்படுத்தப்பட்டது.
சமையலறையில் தென்னகோன் குடும்பம் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது. திடீரென சூட்டி பயங்கரமாக ஊளையிட ஆரம்பித்தது. சமையலறை கதவை முன் கால்களால் மோதியது. விசித்திரமாக சிணுங்கியது. திரும்பத் திரும்ப கதவைத் தட்டியது.
“மழையில் திருடன் வந்திருப்பானோ?” “குளிரில் வீட்டுக்குள் வர முயற்சி செய்கிறதோ?” என்று நினைத்த தென்னகோன் கதவைத் திறந்தார்.
கதவு திறந்ததும் சூட்டி குரைத்தபடி முன்னால் பாய்ந்து ஓடியது. அடுத்த நொடி... மலையிலிருந்து பெரிய பாறைகள் உருண்டு உருண்டு வரும் பயங்கர சத்தம்!
“நிலச்சரிவு! நிலச்சரிவு! காப்பாற்றுங்கள்!”என்று தென்னகோன் கத்தியபடி வீட்டுக்குள் ஓடினார். மனைவியையும் மாமியாரையும் இழுத்துக்கொண்டு வெளியே பாய்ந்தார். மூவரும் மழையில் நனைந்தபடி 200 மீட்டர் தூரம் ஓடினர்.
அவர்களின் அலறல் சத்தம் அக்கம்பக்கத்து வீடுகளை எழுப்பியது.11 பேர் உயிரோடு வெளியே ஓடி வந்தன்தனர். காலையில் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது...
அவர்கள் வாழ்ந்த இடம் முழுக்க மண்ணும் பாறைகளும் மூடியிருந்தன. வீடுகள் தெரியவில்லை. ஒரு சில அடிகள் தாமதமாகியிருந்தால் 14 பேரும் மண்ணுக்குள் புதைந்திருப்பர்.
“சூட்டி இல்லையென்றால் இன்று நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம்.அது தெய்வமாக வந்தது,” என்று கண்கலங்கியபடி தென்னகோன் கூறினார்.இலங்கை துயரத்தில் மூழ்கியிருக்கும் இந்த நேரத்தில்... ஒரு நாயின் உணர்வும் விசுவாசமும் 14 உயிர்களை மீட்டிருக்கிறது.
சூட்டி இப்போது அந்தக் கிராமத்தின் ஹீரோ.மழையும் மண்ணும் அடங்கிய பிறகு, அது மீண்டும் வாலை ஆட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தது...யாருக்குமே தெரியாது, அது மீண்டும் ஒரு நாள் உயிர் காக்குமா என்பது.
ஆனால் இன்று... சூட்டி இலங்கை மக்களின் இதயத்தில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட்டது.
Summary : In Sri Lanka’s deadly landslides, a dog named Sooty saved 14 lives in Maskeliya, Badulla. On November 28 night, amid heavy rain, Sooty barked frantically and led its owner to safety just before a massive landslide buried their homes. The loyal dog is now the village hero.
