சேலம் பழைய பேருந்து நிலையம் (ஈரடுக்கு / டபுள் டெக்கர் பேருந்து நிலையம்) மேல் தளத்தில் உள்ள கடைகள் பூட்டப்பட்ட நிலையில் சமூக விரோதச் செயல்களுக்கு கூடாரமாக மாறியுள்ளது - கடுமையான குற்றச்சாட்டு
சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரடுக்கு (டபுள் டெக்கர்) வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டது.

இதன் முதல் தளத்திலும் இரண்டாம் தளத்திலும் வணிக நோக்கத்திற்காக 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல ஆண்டுகளாக இந்த கடைகள் அனைத்தும் ஒப்பந்தம் விடப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன.

இதனால், இந்த பகுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தினசரி ஏராளமான பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் இப்பகுதியை வந்து செல்லும் நிலையில், மேல் தள கடைகள் கஞ்சா புகைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், மது விற்பனைக்கும், பாலியல் தொழிலுக்கும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிய வருகின்றன.

சில கடைகளை திறந்து பார்த்தபோது, உள்ளே படுக்கை போன்ற அமைப்புகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், பெண்களின் உள்ளாடைகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கிடைத்ததாகவும், இரவு-பகல் பாராமல் இத்தகைய செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. காதலர்கள் தனிமையில் இருப்பதை பயன்படுத்தி விபச்சாரம் நடைபெறுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைப்பதை நேரில் கண்டு பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த போதும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை விடுவித்துவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. கஞ்சா விற்பனையாளர்கள் யார், எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை கூட நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளன. மாநகராட்சிக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கடை உரிமையாளர்களும், தரைதள கடை உரிமையாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

காலை 6 மணி முதல் 8 மணி வரை பள்ளி சிறுவர்-சிறுமிகளையும் இளம் பெண்களையும் அழைத்து வந்து அத்துமீறல் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பகல் வேளையில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கடைகளுக்குள் சென்று கஞ்சா புகைப்பதை நேரில் காண முடிவதாகவும் தெரிய வருகிறது.
இந்த கட்டிடம் பல கோடி ரூபாய் மதிப்புடையது என்றாலும், திறப்பு விழா கண்ட பல ஆண்டுகளாகியும் கடைகள் ஒப்பந்தம் விடப்படாததால் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, உபகரணங்கள், லைட்கள், சுவிட்ச் பாக்ஸ்கள் உடைக்கப்படுவதும் தொடர்கிறது.

இதனால், தமிழக அரசு உடனடியாக கடைகளை ஒப்பந்தம் விட்டு வருவாய் ஈட்டும் வகையில் பயன்படுத்த வேண்டும் அல்லது போதிய பாதுகாப்பு போட வேண்டும் என பொதுமக்களும், கடை உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் உடனடி ஆய்வு நடத்தி சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது போன்ற சமூக விரோத செயல்கள் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், சேலம் மாநகராட்சி மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
Summary : The old Salem bus stand's upper floors, renovated with over 100 shops, remain closed and unleased for years. This has led to unauthorized use, illegal activities, substance issues, and poor maintenance. CCTV cameras are damaged, and repeated complaints to authorities have not resulted in action or leasing yet.

