இரவின் அமைதியை கிழித்தெறிந்த கூக்குரல் இல்லாமல், கூரம்பட்டி கிராமத்தின் ஒரு சிறிய வீட்டில் மரணம் நடந்தேறியது. அது ஒரு திட்டமிட்ட கொலை... காதலின் பெயரால், வெறுப்பின் ஆழத்தில் முளைத்தெழுந்த கொடூரம். ராம்குமார், 26 வயது இளைஞன்.
அமைதியானவன், பொறுமையானவன். எட்டு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தின் வற்புறுத்தலால் சுஜாதாவை திருமணம் செய்துகொண்டான். சுஜாதா – அவள் மனம் வேறொரு இடத்தில் இருந்தது.

ஆறு ஆண்டுகளாக கணேஷ் என்ற இளைஞனை காதலித்தவள். பள்ளி நாட்களில் தொடங்கிய அந்த காதல், பெற்றோரின் எதிர்ப்பால் தடைபட்டது. ஆனால் அது அவளது இதயத்தில் அணையவில்லை. திருமணத்துக்குப் பின், ராம்குமாரை அவள் வெறுத்தாள். தொடுதல் கூட பொறுக்கவில்லை. "கைப்பட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்" என்று தினமும் சண்டை.

ராம்குமார் விசாரித்தான். ஊரில் பேச்சுகள் கேட்டான். கடைசியில் நேரடியாகக் கேட்டான். சுஜாதா ஒப்புக்கொண்டாள் – "ஆமாம், கணேஷைத்தான் காதலித்தேன். உங்களை என் விருப்பத்தால் திருமணம் செய்யவில்லை. பெற்றோர் கட்டாயப்படுத்தினார்கள்." ராம்குமார் அதிர்ச்சியடைந்தான்.

ஆனால் அவன் கோபப்படவில்லை. "பாஸ்ட் இஸ் பாஸ்ட்" என்று சொல்லி, அமைதியாக வாழ முயன்றான். சண்டை போடாமல், புரிந்துகொள்ள முயன்றான். ஆனால் சுஜாதாவின் மனதில் ஆத்திரம் வளர்ந்தது. காதலன் கணேஷுடன் தொடர்பு வைத்திருந்தாள். நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு சிறு சண்டை.

அதை சாக்காக வைத்து, சுஜாதா வீட்டை விட்டு ஓடினாள். கணேஷுடன் சென்றாள். பெற்றோர் தேடிப்பிடித்து, புத்திமதி சொல்லி திருப்பி அனுப்பினர். வீட்டுக்கு வந்த சுஜாதா கெஞ்சினாள் – "என்னை கணேஷிடம் அனுப்பிவிடு. நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்." ராம்குமார் மறுத்தான். "ஊர் உலகம் என்னை மதிக்குமா? நான் என்ன செய்வேன்?" என்றான்.

நாட்கள் சென்றன. ஆத்திரம் அடங்கவில்லை. சுஜாதா முடிவெடுத்தாள் – கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும். திட்டம் தீட்டினாள். காதலன் கணேஷ், அவனது நண்பன் மோகன் – மூவரும் சேர்ந்து வினோதமான திட்டமிட்டனர். அன்று இரவு 11 மணி.

ராம்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சுஜாதா பூனை போல வந்து கதவை திறந்து விட்டாள். கணேஷ் உள்ளே நுழைந்தான். தலையணையை ராம்குமாரின் முகத்தில் அழுத்தினான். சுஜாவின் உள் பாவாடை ஒன்றில் இருந்த நாடாவை எடுத்து கழுத்தில் சுருக்கினான். ராம்குமார் திணறினான், கத்த முயன்றான்.
மோகன் வாயை பொத்தினான். அருகில் கிடந்த கடப்பாறையை எடுத்து, கணேஷ் தலையில் ஓங்கி அடித்தான். கழுத்திலும் குத்தினான். இரத்தம் பெருகியது. தலையணை முழுவதும் ரத்தத்தால் சிவந்தது. ராம்குமார் உயிரிழந்தான்.

வெற்றி பெற்றதை போல சுஜாதாவும், கணேஷும் கட்டியணைத்து கொண்டனர். அதன் பிறகு தான், சுஜாதா நடிப்பு அரக்கியாக உருவெடுத்தாள்... கணேஷ், மோகன் இருவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தால். விடிய ஆரம்பித்தது, "ஐயோ... என் கணவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறாரே... என்ன ஆச்சுன்னு தெரியலையே.. காலையில எழுப்புறதுக்கு போனேன்.. இப்படி கிடக்குறாரு..?" என்று அலறினாள்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். நீலிக் கண்ணீர் வடித்தாள். ஆனால் போலீசார் வந்தபோது, அவள் கதை மாறியது. சொன்னதையே திருப்பி திருப்பு சொன்னாள்.. தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் அவள் வாயில் வந்தன.. கணவன் இறந்து விட்டாரே என்ற ஏக்கமோ, கவலையோ அவள் கண்ணில் இல்லை.. முன்னுக்குப் பின் முரணாக பேசினாள். துருவித் துருவி விசாரித்த போலீசார்.

சுஜாவின் கைப்பேசியை கைப்பற்றி பரிசோதனை செய்ததில், இரவு முழுதும் கணேஷுடன் பேசியதற்காக ஆதாரம். இறுதியில் சுஜாதா உடைந்தாள். காதல் கதை முதல் கொலை திட்டம் வரை அனைத்தையும் ஒப்புக்கொண்டாள்.
கணேஷ், மோகன், சுஜாதா – மூவரும் கைது செய்யப்பட்டனர். கம்பி எண்ணும் நிலைக்கு வந்தனர். ராம்குமாரின் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவன் இழந்த துக்கத்தில் மூழ்கினர். சுஜாதா காவல் வாகனத்தில் ஏறும்போதும் கண்ணீர் வடித்தாள் – ஆனால் அது வருத்தத்துக்காக அல்ல.

தன் 'மாஸ்டர் பிளான்' தோல்வியடைந்ததற்காக... பக்காவாக திட்டமிட்டும், தொக்காக மாட்டிக்கொண்டோமே என்ற விரக்திக்காக. இது ஒரு கதை அல்ல. விருப்பமில்லாத திருமணத்தின் விளைவு. கட்டாயப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் கொடூர முடிவு.

காதலும் வெறுப்பும் கலந்து எழுந்த ஒரு இரத்தக் கறை படிந்த நிஜம். இதுபோன்ற விபரீதங்கள் தொடர்ந்து நடக்குமா? பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்யும் இளைஞர்கள், இதைப் பார்த்து என்ன சிந்திப்பார்கள்? கேள்விகள் எஞ்சியிருக்கின்றன... ஆனால் ராம்குமாரின் உயிர் திரும்பி வராது.
Summary in English : In Krishnagiri district, a woman unhappy in her arranged marriage, due to her past relationship, planned with her former partner and his friend to end her husband's life. The incident occurred at night, leading to the arrest of all three involved.


