சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவரும் மூத்த தலைவருமான கே. அண்ணாமலை தனக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஜக தலைமை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளையும் பிரித்து, கட்சி நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை ஒதுக்கியது. ஒரு பொறுப்பாளருக்கு குறைந்தபட்சம் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சம் 9 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

இதில் அண்ணாமலைக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் (சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைங்குண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் உள்ளிட்டவை) பொறுப்பாக ஒதுக்கப்பட்டிருந்தன.
இது மற்ற பல மூத்த நிர்வாகிகளை விட அதிகமான தொகுதிகள் என்றாலும், அண்ணாமலையின் மாநிலம் முழுவதும் உள்ள செல்வாக்கு மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் என்ற அந்தஸ்தை கருத்தில் கொண்டு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இது போதுமானதாக இல்லை என்ற கருத்து நிலவியது.
சில வட்டாரங்களில், இந்த ஒதுக்கீட்டில் அதிருப்தி இருந்ததாகவும், அது விலகலுக்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.
அண்ணாமலை தரப்பில் இருந்து வெளியான அதிகாரப்பூர்வ காரணம் தனிப்பட்ட காரணங்கள் ஆகும். குறிப்பாக, தந்தையின் உடல்நிலை சரியில்லாதது காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளில் பெரிய அளவில் ஈடுபட முடியாது என்றும், ஆனால் பாஜக தேசியத் தலைமை வலியுறுத்தினால் பிரச்சாரத்தில் பங்கேற்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும் சூழலும் முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இந்த முடிவைத் தெரிவித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாஜக வட்டாரங்களில், தேசியத் தலைமை அண்ணாமலையுடன் பேசி சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்ளலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்த விலகல், வரும் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உத்திகள் மற்றும் அண்ணாமலையின் பங்கு குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களாக தனிக்கட்சி தொடங்கும் மனநிலையில் இருந்த அண்ணாமலை தற்போது தவெக-வில் விரைவில் ஐக்கியமாக இருக்கிறார் என்றும், விஜய்க்கு அடுத்தபடியாக இருக்கும் பதவியை தவெக அண்ணாமலைக்கு கொடுக்க முன்வந்துள்ளதாகாவும் காத்து வாக்கில் செய்திகள் பரவுகின்றனர்.
ஒருவேளை, அண்ணாமலை தவெகவில் இணைந்தால் அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்த தேர்தல் களத்தையும் மாற்றும் விதமாக அமையும் எனவும் கூறுகிறார்கள்.
Summary : Former Tamil Nadu BJP leader Annamalai has stepped down from his election in-charge role for six assembly constituencies. He cited personal reasons, including his father's health, and stated he will not engage extensively in election work but is open to campaigning if requested by the national leadership.

