இந்திய சினிமா இசையின் ஈடு இணையற்ற பின்னணி பாடகியாகப் போற்றப்படும் எஸ்.ஜானகி அவர்கள், ஜூலை 11, 2026 அன்று மைசூரில் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக 88 வயதில் மரணமடைந்தார்.
அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த இசை உலகையும், குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தனது காந்தக் குரலால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட 'கானக்குயில்' என்று அழைக்கப்படும் ஜானகி அம்மாவின் பங்களிப்பு இந்திய இசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
பிறப்பு மற்றும் இசைப் பயணம்
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் 1938 ஏப்ரல் 23 அன்று பிறந்த ஜானகி அம்மா, சிறு வயதிலிருந்தே இசையில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
20க்கும் மேற்பட்ட மொழிகளில், குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்டவற்றில் 48,000க்கும் அதிகமான பாடல்களை பாடிய சாதனையாளர் அவர். இசையமைப்பாளர்களுடன் இணைந்து உருவாக்கிய அவரது பாடல்கள் இன்றும் தலைமுறைகளுக்கு இடையே எதிரொலிக்கின்றன.
குடும்ப வாழ்க்கை: காதல், தியாகம் மற்றும் சோகங்கள்
ஜானகி அம்மாவின் இசைப் பயணத்திற்குப் பின்னால் ஒரு அழகிய காதலும், பெரும் தியாகமும் இருந்தது. 1959ஆம் ஆண்டு வி. ராம்பிரசாத் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவரது அசாத்திய திறமையைக் கண்டறிந்த ராம்பிரசாத் தான், ஜானகியை முதன்முதலில் சென்னை AVM ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றவர்.
திருமணத்திற்குப் பிறகு, ஜானகி என்ற ஆளுமை உலகுக்கு அறிமுகமாக வேண்டும் என்பதற்காக தனது சொந்த வாழ்க்கையை முழுவதுமாக அவரது இசைப் பயணத்திற்கு அர்ப்பணித்தார் ராம்பிரசாத். துரதிர்ஷ்டவசமாக, 1997ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்
.இந்த தம்பதியருக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் இருந்தார். ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா, 2026 ஜனவரி 22 அன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மகனின் மறைவு ஜானகி அம்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிதும் பாதித்தது.
மருமகள் உமா முரளிகிருஷ்ணா சென்னையில் வசிக்கும் புகழ்பெற்ற பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞர் ஆவார். ஜானகி அம்மாவுக்கு வர்ஷா மற்றும் அப்சரா என இரண்டு பேத்திகள் உள்ளனர். அப்சரா தான் ஜானகி அம்மாவின் மறைவுச் செய்தியை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
சொத்து மதிப்பு மற்றும் வாழ்க்கை
ஜானகி அம்மா சென்னை, ஹைதராபாத் மற்றும் இறுதிக் காலத்தில் வசித்து வந்த மைசூர் ஆகிய நகரங்களில் குடியிருப்பு வீடுகள் மற்றும் அசையா சொத்துக்களை வைத்திருந்தார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாடிய 48,000க்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து கிடைத்த ராயல்டி மற்றும் பிற முதலீடுகள் அவரது சொத்துக்களில் அடங்கும்.
சினிமா வட்டாரங்களின் உத்தேசக் கணக்கீட்டின்படி, 2026 ஜூலை நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு சுமார் 15 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இசை உலகின் இழப்பு
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரமுக்கள் உள்ளிட்ட பலர் ஜானகி அம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது குரல் தென்னிந்திய சினிமாவின் தங்கக் காலத்தை நினைவூட்டும் ஒன்றாக என்றும் நிலைத்திருக்கும்.
ஜானகி அம்மாவின் இசைப் பயணம் ஒரு உத்வேகமாக இருந்தது; அவரது பாடல்கள் எண்ணற்ற இதயங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ளன.
இசை உலகின் இந்த மாபெரும் இழப்புக்கு நம் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜானகி அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
English Summary : Legendary playback singer S. Janaki, known as the Nightingale of South Indian cinema, passed away at the age of 88 in Mysuru on July 11, 2026. She leaves behind a rich legacy of over 48,000 songs across multiple languages. Her husband Ramprasad and son Murali Krishna predeceased her. Granddaughter Apsara shared the news. Her estimated property value ranges from 15 to 25 crore rupees.