அருமையான ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி செய்யும் முறை

 

உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக சுவையான, அதே சமயம் சற்று காரமான சட்னி செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஹோட்டலில் கொடுக்கப்படும் கார சட்னி பிடிக்குமா? அதை வீட்டிலும் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக ஹோட்டலில் கொடுக்கப்படும் கார சட்னியை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். அந்த ஹோட்டல் ஸ்டைல் கார சட்னியின் செய்முறையைப் படித்து தெரிந்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* வரமிளகாய் – 4

---- Advertisement ----

* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 4 பல் (தோலுரித்தது)

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு:

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 3/4 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதே வேளையில் வறுத்த வரமிளகாயை சுடுநீரில் ஊற வைக்க வேண்டும்.
* வெங்காயம் பொன்னிறமானதும், அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்கள் அனைத்தையும், மிக்சர் ஜாரில் போட்டு, வரமிளகாயையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி தயார்.

குறிப்பு:

* வரமிளகாயை நீரில் ஊற வைத்தால் அரைக்கும் போது ஈஸியாக இருக்கும்.
* காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
* விருப்பமுள்ளவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்டை வதக்கும் போது சேர்த்துக் கொண்டால், இன்னும் சுவையாக இருக்கும்.
* தாளிக்கும் போது நல்லெண்ணெயைப் பயன்படுத்திக் கொண்டால், சட்னி இன்னும் நல்ல ப்ளேவருடன், அளவான காரத்தில் இருக்கும்.

 

---- Advertisement ----