நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் உணர்வுகள் உண்டு – போட்டு உடைத்த நடிகை கீர்த்தி ஷெட்டி..!

இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ) முன்னணி நடிகைகளுக்கு கடும் போட்டியாக கிடுகிடுவென முன்னேறி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஷ்யாம் சிங்கா ராய் படம் சக்கை போடு போட்டு வருகின்றது. இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. அப்போது, பிரபல ஊடகம் ஒன்றிக்கு கீர்த்தி ஷெட்டி பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில், “நான் எந்த நடிப்புப் பயிற்சியும் பெறவில்லை. சினிமாவில் எனக்கு எந்தப் பின்னணியும் கிடையாது. எனவே நான் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். அதுதான் எனக்கு திரையுலகில் பரவலான அனுபவத்தைக் கொடுக்கும். வெவ்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்வதன் மூலம் நான் வெவ்வேறு கதைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

பார்வையாளர்களுக்கு ஒரே விஷயத்தை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. இயக்குநர்களும் வித்தியாசமான கதைகளுடன் என்னை அணுகுவது என்னுடைய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். வழக்கமாக நானும் என் அம்மாவும்தான் கதைகளை கேட்டு, அந்தக் கதாபாத்திரம் எனக்கு பொருந்துமா இல்லையா என்பதை முடிவு செய்வோம்.

என்னுடைய 13-வது வயதில் விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். விளம்பரங்களுக்கான படப்பிடிப்புகளை பொறுத்தவரை, பொதுவாக அவை ஒரே நாளில் முடிந்து விடும். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விளம்பரத்துக்காக ஹைதராபாத் வந்திருந்தபோது எனக்கு ‘உப்பேனா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படித்தான் என்னுடைய முதல் பட வாய்ப்பு கிடைத்தது.

‘ஷ்யாம் சிங்கா ராய்’ படம் வெளியானபோது நான் மைனர் அல்ல. ஆனால் ‘உப்பேனா’ படத்தின்போது நான் ஒரு மைனர். ஆனால் காதல் காட்சிகளின்போது எனக்கு சங்கடமில்லாத ஒரு சூழலை அவர்கள் உருவாக்கிக் கொடுத்தனர். சில கேமரா தந்திரங்களும் கையாளப்பட்டன. படப்பிடிப்பில் எப்போதும் என் அம்மா என்னோடு இருப்பார்.

---- Advertisement ----

மூத்த நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டரும் என்னுடன் இருந்தார். அதுபோன்ற காட்சிகளை எப்படி கையாளவேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. அதுபோன்ற காட்சிகளில் நடிகர் நடிகையர் சங்கடமின்றி இருப்பது முக்கியம்” என்றார்.

மேலும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்துக்கான ப்ரொமோஷன் நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர், படத்தில் இடம்பெற்ற நெருக்கமான காட்சிகள் குறித்து அநாகரிகமான கேள்வி ஒன்றை கேட்டது தொடர்பாக கீர்த்தி ஷெட்டி கூறும்போது ‘சினிமா பத்திரிகையாளர்கள் அவர்களது பொறுப்பை உணர்ந்து நடக்கவேண்டும். அவர்கள் எங்கள் இடத்தில் இருந்து அப்படியான கேள்வியை கேட்டால் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் யோசிக்க வேண்டும். அது ஒரு தேவையற்ற கேள்வி. அது எனக்கு சிறிது வருத்தத்தை கொடுத்தது.

நடிகர்களாக இருந்தாலும், நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் உணர்வுகள் உண்டு. மக்கள் மரியாதைக்குறைவாக எதைப் பேசினாலும் எங்களுக்கு வலிக்காது என்பதல்ல. அனைத்து நடிகர்கள் சார்பாகவும் இதை நான் சொல்கிறேன். அவர்கள் உணர்ந்துகொண்டால் மகிழ்ச்சி” என்று கூறினார்.

---- Advertisement ----