விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
கட்சியில் சேர்ந்த முதல் நாளே இவருக்கு தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து பிரிந்து வந்த இவர் தவெக கட்சியில் இணைந்ததும் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனுடன் சந்திப்பை மேற்கொண்டிருக்கிறார்.
இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா உடைய முதல் வேலை அதிமுகவுடன் தவெக கூட்டணியை உறுதிப்படுத்துவது தான் என்று கூறுகிறார்கள்.
கணிசமான தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெறுவது குறித்த வேலைகளில் ஆதாவ் அர்ஜுனா தீவிரமாக ஈடுபடுவார் என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தவெக தரப்பிலிருந்து அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 60 இடங்களை பெற வேண்டும் என்று கூறுகிறார்களாம். ஆனால், அதிமுக அந்த அளவுக்கு இடத்தை தமிழக வெற்றி கழகத்திற்கு கொடுக்குமா..? என்பது வேடிக்கையான விஷயம்.
ஏனென்றால் தமிழக வெற்றி கழகம் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. அவர்களுடைய வாக்கு சதவீதம் என்ன என்று நிறுவப்படவில்லை. இதை வைத்து பார்க்கும் போது அதிமுக தமிழக வெற்றி கழகத்திற்கு 60 இடங்கள் கொடுத்தால் அது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும்.
ஆனால், இந்த சூழலை கையாண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியை உறுதிப்படுத்துவது தான் ஆதவ் அர்ஜுனாவின் முக்கிய வேலை என்று கூறுகிறார்கள் விவரமறிந்த வட்டாரங்கள். தவெகவின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.