2026 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான சூடு தற்போதே அரசியல் களத்தில் தொற்றி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் நோக்கிய நகர்வு.
பெரிய கூட்டணி எதுவும் இல்லாமலேயே கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களை வெற்றி பெற்றது. மிகப்பெரிய கூட்டணி அமைத்து திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற பொது தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பெரிய கட்சிகள் முடுக்கிவிட்டு இருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பங்களிப்பு 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
நடிகர் விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டாலே எளிதாக 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கை பெற முடியும் என்று கணிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
ஆனால், இது ஆட்சி அமைப்பதற்கு போதுமானது கிடையாது. நடிகர் விஜய் தனித்து போட்டியிடுவது திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும். ஆனால், அதிமுகவுடன் சேர்ந்து நடிகர் விஜய் போட்டியிடும் பட்சத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கிய மூன்று வருடத்தில் எதிர்க்கட்சியாக அமரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை எடுத்துக்காட்டாக மேஜை மீது வைக்கிறார்கள். ஒருவேளை 2011 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக தனித்து போட்டிருந்தால் அந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தனைக்கும், திமுக மீது 2G இமாலய ஊழல் குற்றச்சாட்டு மற்றும் மின்வெட்டு போன்ற பிரதானமான எதிர்ப்பலை இருந்தது.
அந்த நேரத்தில் கூட திமுக வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் இருந்தன. கடைசியாக விஜயகாந்தின் தேமுதிக அவருக்கு 41 இடங்களை ஒதுக்கி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தார் அதிமுக பொதுச் செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
அந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. தேமுதிக திமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்த அதிசயம் நடைபெற்றது. ஆனால், தேமுதிகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அந்த கட்சிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்தன. மட்டுமல்லாமல் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலையும் அவருடைய அரசியல் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் போய்விட்டது.
ஆனால், நடிகர் விஜய்க்கு அப்படியான சூழ்நிலை கிடையாது. கட்சி தொடங்கிய உடனே ஆட்சி அமைக்கலாம் என்று அவர் யோசிக்காமல் எதிர்க்கட்சியாக அமரலாம் என்று யோசித்தால் அது சாத்தியப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மட்டுமில்லாமல் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் அதிமுகவுடன் 60 இடங்கள் கேட்கப்படுவதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இதனை அறிந்த விவரம் அறிந்த வட்டாரங்கள் கனவாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏனென்றால் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டு தனக்கான வாக்கு சதவீதத்தை நிரூபித்த பிறகும் 2011ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு 41 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டது. அப்படி இருக்கும் பொழுது இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் 60 இடங்களுக்கு ஆசைப்படுவது நடக்காத காரியம்.
அதே சமயம் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பதும் தற்போது இருக்கும் அரசியல் களத்தை பொருத்தவரை நடக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. 2011-ம் ஆண்டுக்கான தமிழக தேர்தல் களத்தையும், முடிவுகளையும் மனதில் கொண்டு தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழக மக்களின் நலனுக்காக ஒரு நல்ல முடிவை எடுக்கும் பட்சத்தில் அது நடிகர் விஜய்க்கும் அதே சமயம் தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல முடிவாக பார்க்கப்படும்.
இதை விட்டுவிட்டு நடிகர் விஜய் தனித்துப் போட்டியிட்டால் அவர் போட்டியிடும் தொகுதியில் வெற்றி பெறுவார். ஆனால், அவரை நம்பி தேர்தல் களத்தில் நிற்கக்கூடிய எந்த போட்டியாளரும் வெற்றி பெற மாட்டார். இதே தான் கேப்டன் விஜயகாந்த்திற்க்கும் நடந்தது.
நடிகர் விஜய் தன்னுடைய கட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றாலும் அவருக்கு அரசியல் அதிகாரம் என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த அதிகாரத்தை பெறுவதற்கு அவருக்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், ஆட்சியை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் திமுகவை பொருத்த வரை அதிமுக, தவெக கூட்டணி அமையாமல் பார்த்துக்கொண்டாலே 2026 தேர்தலிலும் வெற்றி வாகை சூடி விடலாம் என்றும் கூறுகிறார்கள் அரசியல்எ ஆய்வாளர்கள்.
இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் எடுப்பது மட்டும் முடிவு கிடையாது. தமிழகத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவும் முடிவு செய்ய வேண்டும். இந்த கூட்டணி அமையுமா..? அமையாதா..? என்பதெல்லாம் இரண்டாவது விஷயம்.
இந்த கூட்டணி அமைந்தால் எப்படியான சூழலில் அமையும்.. எப்படியான முடிவுகளை மக்கள் அதற்கு கொடுப்பார்கள் என்பது குறித்த விவாதங்கள் தற்போது இணையப் பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த விஷயத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்..? தமிழக வெற்றி கழகம் சார்பில் எடுத்த எடுப்பில் அவர்கள் 60 தொகுதிகளுக்கு ஆசைப்படுவது நியாயமானது தானா..? உங்களுடைய கருத்து என்ன..? என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.
Loading ...
- See Poll Result