Connect with us

அள்ள அள்ள பணம்..! பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? – பகுதி 2

அள்ள அள்ள பணம்..! பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? – பகுதி 2

வணக்கம் நண்பர்களே..! ஒரு வேளை அள்ள அள்ள பணம்..! – பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? – பகுதி 1-னை நீங்கள் படிக்காமல் இங்கே வந்திருந்தால். தயவு செய்து இங்கே க்ளிக் செய்து முந்தையை பகுதியை படித்திவிட்டு வாருங்கள். அதனை படிக்காமல் இதனை படித்தால் புரிந்து கொள்ள முடியாது.

சரி வாங்க, இன்றைய பகுதிக்குள் போகலாம். முந்தைய பதிவில் பங்கு சந்தை என்றால் என்ன..? ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துடைய பங்கின் விலை ஏற்ற இறக்கத்திற்கு அந்த நிறுவனத்தின் லாப நஷ்டத்தை பொருத்தது என்று பார்த்தோம்.

இன்று, வேறு என்னென்ன காரணிகள் பங்கின் விலையில் ஏற்ற இறக்கத்தை கொண்டு வருகின்றன…? நொடிக்கு நொடி பங்கின் விலை ஏறி இறந்குகிறதே..? அப்படியென்றால் அந்த நிறுவனத்தின் மொத்த லாப, நஷ்டமும் நொடிக்கு நொடிக்கு மாறுமா..? யார் தான் இந்த ஏற்ற இறக்கத்திற்கு காரணம்..? என்ற கேள்விகளுக்கு விடையைத்தான் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

ஒரு நிறுவனத்தின் லாப நஷ்டம் என்பதை ஒரு பக்கம் வைத்து விடுங்கள். அந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு சந்தையில் என்ன டிமாண்ட் இருக்கிறது என்பது தான் விலை ஏற்றத்தையும் இறக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது. இதனை செய்வது வேறு யாருமில்லை, முதலீட்டாளர்களான நாமே தான்.

எப்படி என்று ஒரு உதாரணத்துடன் பார்த்தல் புரிதலுக்கு எளிமையாக இருக்கும். ABC என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. ஒரு பங்கின் விலை 500 ரூபாய் வீதம் ஒரு கோடி பங்குகளை சந்தையில் விற்று விட்டது என்று வைத்துக்கொள்வோம்.

இந்த ஒரு கோடி பங்குகளையும் பல்வேறு பங்குதாரர்கள் வாங்கி விட்டார்கள். இப்போது, புதிதாக ஒருவர் அந்த பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகிறார் என்றால் எங்கே போய் வாங்குவார்….???? – யோசியுங்கள் பார்ப்போம்….! வேறு எங்கும் வாங்க முடியாது. ஏன் என்றால் அந்த நிறுவனம் கொடுத்த அனைத்து பங்குகளையும் பங்குதாரர்கள் வாங்கிவிட்டார்கள். இப்போது, ஏற்கனவே பங்கினை வாங்கி வைத்துள்ள பங்குதாரர்களிடம் இருந்துதான் புதிதாக வாங்கவிருப்பவர் வாங்கியாக வேண்டும். வேறு வழியே இல்லை.

ஒரு பொருளின் விலை என்பது அதனுடைய டிமாண்டை பொருத்து தான் என்பது நம்முடைய எல்லோருக்கும் தெரியும். உதாரணமாக, ஒரு மளிகை கடையில் 10 கிலோ தக்காளி மட்டுமே உள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய். ஆனால், அந்த தக்காளியை வாங்க வெளியே 20 பேர் நின்று கொண்டிருகிறார்கள்.

ஒவ்வொருவரும், தலா 1 கிலோ தக்காளி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, தக்காளியின் டிமாண்ட் அதிகமாக இருக்கின்றது. ஆனால், சப்ளை குறைவாக உள்ளது. எனவே, தக்காளியின் விலையை மளிகை கடைக்காரர் 120 என ஏற்றிவிடுவார். அல்லது, வாங்க வந்தவர்களில் ஒருவர் நான் 120 ரூபாய் கொடுக்கிறேன் எனக்கு ஒரு கிலோ தக்காளி தாங்க என்று அவரே விலையை அதிகமாக கொடுக்க முன்வருவார்.

இதையே திருப்பி பாருங்கள்..! மளிகை கடையில் 20 கிலோ தக்காளி இருக்கின்றது. ஆனால், வாங்குவதற்கு, 10 பேர் தான் இருக்கிறார்கள். இப்போது, என்ன ஆகும். தக்காளியின் விலையை குறையும். ஒன்று கடைக்காரரே, ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் என்று குறைத்துவிடுவார். அல்லது, வாங்க வந்தவர்கள் கிலோ 50 ரூபாய்க்கு குடுங்க என்று விலையை மேலும் குறைக்கவும் வாய்ப்பு உள்ளது. காரணம், தக்காளியின் சப்ளை அதிகமாக இருக்கிறது. டிமாண்ட் குறைவாக உள்ளது.

இன்னும் எளிமையாக சொன்னால், சாதரண நாட்களில் ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ 200 ரூபாய்க்கு விற்கும். ஆனால்,பண்டிகை நாட்களில்,சுபமுஹூர்த்த நாட்களில் கிலோ 1000 ரூபாய்க்கு விற்கும். இன்னும், திருமண நாட்கள் கூடி விட்டால் போதும், கிலோ 2000 ரூபாய்க்கு கூட விற்கிறார்கள்.

இதற்கு காரணம் என்ன..? மல்லிகை பூவின் தரம் உயர்ந்துவிட்டதா..? இல்லை. அதே மல்லிகை தான். ஆனால், டிமான்ட் அதிகமாக இருக்கின்றது. இது தான் விலையை ஏற்றி விடுகின்றது. அதே போல, சாதாரண நாட்களில் மல்லிகையின் தரம் குறைந்து விட்டதா..? இல்லை. அதற்கு மக்களிடம் டிமாண்ட் இல்லை. அதனால், விலையை குறைத்து விற்றுவிடுகிறார்கள்.

இதே தான் பங்கு சந்தையிலும் நடக்கின்றது. ABC நிறுவனத்தின் ஒரு கோடி பங்குகளை பங்குதாரர்கள் வாங்கி வைத்துள்ளார்கள். அதில் நீங்களும் ஒருவர் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள், ABC நிறுவனத்திடம் ஒரு பங்கின் விலை 500 வீதம் 5,000 ரூபாய்களை கொடுத்து பத்து பங்குகளளை வாங்கி வைத்துள்ளீர்கள்.

இப்போது, புதிதாக அந்த பங்கை வாங்க ஆர்வம் காட்டும் பலர் உங்களிடம் 500 ரூபாய்க்கு கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா..? நிச்சயம் கொடுக்க மாட்டீர்கள். ஏனென்றால், அப்படி விற்றால் உங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை.

ஒரு வேளை, அதே பங்கை 550 வீதம் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? ஒன்று, விற்று விடுவீர்கள். அல்லது, இன்னும் விலை ஏறும் என காத்திருப்பீர்கள். ஒரு வேளை நீங்கள் விற்றுவிட்டால் ஒரு பங்கிற்கு 50 ரூபாய் வீதம் பத்து பங்கிற்கும் சேர்த்து 500 ரூபாய் லாபம் பெற்றுவிட்டீர்கள். அவ்வளவு ஏன், பங்கின் விலை 5 ரூபாய் ஏறினால் கூட உங்களுக்கு 50 ரூபாய் லாபம் தான்.

மேலே, சொன்ன விலை ஏற்றத்தில் ABC நிறுவனத்தின் நிகர லாப, நஷ்ட கணக்கிற்கு சம்பந்தம் இருக்கிறதா…? இல்லவே, இல்லை. அந்த பங்கின் டிமான்ட் அதிகமாக இருக்கின்றது. சப்ளை குறைவாக இருக்கின்றது. இது தான் விலையை ஏற்றி விட்டிருக்கின்றது.

சரி, அடுத்த கணக்கிற்கு வருவோம். உங்களிடம், ABC நிறுவனத்தின் 10 பங்குகள் இருக்கின்றன. நீங்கள் ஒரு பங்கு 500 ரூபாய் என 5,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளீர்கள்.

இப்போது, அந்த பங்கினை தற்போது வாங்குவதற்கு ஆளே இல்லை. அல்லது, குறைவான ஆட்களே இருக்கின்றார்கள். வாங்க வருபவர்கள் எல்லாம் 470 ரூபாய்க்கு கொடுத்தால் வாங்கிக்கொள்கிறேன் என்கிறார்கள். இப்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்..?????? – விற்க மாட்டீர்கள்.

ஆனால், உங்களை போலவே ABC நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பலர் இதற்கும் கீழே பங்கின் விலை இறங்கி விடுமோ..! என பயந்து கொண்டு, வந்த வரைக்கும் லாபம்டா சாமி என 30 ரூபாய் நஷ்டத்திற்கு அந்த பங்கை விற்றுவிடுகிறார்கள். இப்போது, என்ன ஆகும். நீங்கள் உங்களுடைய பங்கை விற்றாலும், விற்காவிட்டாலும் உங்களுடைய பங்கின் தற்போதைய விலை குறைந்திருக்கும். அதாவது, 500 ரூபாய்க்கு வாங்கிய பங்கின் விலை தற்போது 470 ரூபாய் என இருக்கும்.

அடுத்தடுத்த நாட்களில் பங்கின் விலை ஏறப்போகின்றது. அல்லது இறங்கப்போகின்றது என்பது வேறு கதை. ஆனால், இப்போதைக்கு உங்களுடைய பத்து பங்குகளின் விலையும் தலா 30 ரூபாய் குறைந்து 300 ரூபாய் நஷ்டம் என்ற நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.

மேலே, சொன்ன நஷ்டத்திற்கும் ABC நிறுவனத்தின் நிகர லாப, நஷ்டத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா..? இல்லவே , இல்லை. அந்த பங்கிற்கு சந்தையில் டிமான்ட் இல்லை. ஆனால், சப்ளை அதிகமாக இருக்கின்றது. அதனால், அந்த பங்கின் விலை இறங்குகின்றது.

மேலே சொன்ன இந்த டிமான்ட் மற்றும் சப்ளை நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். காலை பத்து மணிக்கு டிமாண்ட் குறைவாக இருக்கும். ஆனால், 10:30 மணிக்கு டிமாண்ட் அதிகமாகலாம். அல்லது, மேலும் குறையலாம். ஆக, நொடிக்கு நொடி பங்கின் விலை ஏன் ஏறுகின்றது. ஏன் இறங்குகின்றது என்பதையும் அதில் நம்முடைய பங்கு என்ன என்பதையும் ஓரளவுக்கு நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இன்று இது போதும்,அடுத்த பதிவில் எப்படி மார்கெட்டிற்குள் நுழைவது..? அதற்க்கு, நம்மிடம் குறைந்த பட்சம் எவ்வளவு பணம் தேவை என்பதை பற்றிய டாப் to பாட்டம் பார்க்கலாம்.

பதிவுகளை தவற விடமால் பார்க்க இந்த ( https://www.facebook.com/alla.alla.panam1 ) முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது, ( https://t.me/alla_alla_panam ) என்ற Telegram Channel-ல் இணைந்து கொள்ளலாம். அடுத்தடுத்த பதிவுகளின் லிங்குகளை நான் அவற்றில் உங்களுக்கு பகிர்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

More in Share Market in Tamil

ads
To Top