நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் 20 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், கூட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்களை ஆலோசனை கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து வெளியேறச் சொல்லி நடிகர் விஜய் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, மாவட்டச் செயலாளர்கள் புஷி ஆனந்த் மூலமாகவே தங்களது கருத்துக்களை விஜய்க்கு தெரிவிக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், நேரடியாக தலைவருடன் பேச முடியாததால் கட்சி செயல்பாடுகளில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. “தலைவர் விஜய்யுடன் நேரடியாக தொடர்பில்லாமல் எப்படி ஒரு கட்சியாக இயங்குவது?” என்று மாவட்டச் செயலாளர்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து, விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். “உங்களுக்கு அவ்வளவு தானே பிரச்சனை, ஒரு நிமிடம் இருங்கள்” என்று கூறிவிட்டு, புஷி ஆனந்தை கூட்டத்திலிருந்து வெளியேறச் சொல்லி, மாவட்டச் செயலாளர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்து ஆலோசனை செய்திருக்கிறார். இந்த நேரடி கலந்தாலோசனை, மாவட்டச் செயலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தின் மூலம், விஜய் தனது கட்சி நிர்வாகத்தில் நேரடி கட்டுப்பாட்டை செலுத்த விரும்புவதாகவும், கட்சி உறுப்பினர்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. இது கட்சிக்குள் ஒரு புதிய ஒழுக்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. புஷி ஆனந்தின் எதிர்காலம் என்னவாகும், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் போன்ற கேள்விகள் ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் வெளியானவுடன் இந்த கட்டுரை புதுப்பிக்கப்படும்.
--- Advertisement ---