சென்னை : இசைஞானி இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னைக் குறிவைத்து வரும் ‘கர்வம்’ குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். அவர், “யாராலும் செய்ய முடியாததைச் செய்வதற்காக எனக்கு கர்வம் வரக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது இசையின் அதிசயங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.
இளையராஜா குறிப்பிட்டதாவது, ஒரு மலைப்பகுதியில் உள்ள தியேட்டரில், ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடலைக் கேட்க காட்டு யானைகள் கூட்டமாக வந்து, பாடல் முடிந்ததும் அமைதியாக திரும்பிச் சென்றதாகவும், இது உலகில் நடக்காத ஒரு நிகழ்வாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இசை பலரின் மனதிற்கு இதமாகவும், வலியைப் போக்கும் மருந்தாகவும் இருப்பதாகவும், ஆனால் சிலர் தனது வார்த்தைகளைப் பற்றி விமர்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“நான் சாதாரண ஆள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வெளியில் உள்ளவர்களுக்கு இதைப் பற்றி போற்றுவதற்கோ, புகழ்வதற்கோ மனசு வரவில்லை; வயிறு தான் எரிகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
இளையராஜா தனது சாதனைகளைப் பற்றி பேசும் போது, “உலகத்தில் யாரும் செய்ய முடியாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு திமிரு இல்லாமல் எப்படி இருக்கும்?” என்று கூறினார்.
அவர் மேலும், “நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்; நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கோ,” என்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இளையராஜாவின் இந்தப் பேட்டி, அவரது இசை சாதனைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விமர்சனங்கள் பற்றிய விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
மேலும், இளையராஜா தனது இசை அனுபவங்களைப் பற்றி பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
--- Advertisement ---