சர்க்கரை நோய் உள்ளவர்கள் சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் அருள் மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில் ஆகும் .
இந்த திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் தாலுக்காவில் கோவில்வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது .
முற்காலத்தில் இந்த தலம் முழுவதும் கரும்பு காடுகளால் சூழப்பட்டிருந்தது . ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்ட போது இத்தலம் வந்தனர் .
அப்பொழுது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி கண்டு தொழுதனர் . அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும் மற்றொருவர் வெண்ணி என்று அழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர் .
இறைவன் அசரீரியாக தோன்றி தனது பெயரில் கரும்பும் தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும் என்றருளினார் . அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .
பிரார்த்தனை :
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும் ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம்வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள் .
இதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாக குணமடைகிறார்கள் என்பது காலம் காலமாக உள்ள இங்குள்ள ஐதீகமாகும் .
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து படைத்து விநியோகம் செய்து வழிபாடு செய்கின்றனர் .
இத்திருத்தலத்தின் பெருமை :
மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தல வரலாறு கூறுகிறது .
இங்கு வீற்றிருக்கும் இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்பு கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார் .
கரிகாற் சோழன் தனது 18 வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர சோழ குறு நில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றான் . கரிகாற் சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றி என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது
இங்குள்ள பிடாரி அம்மனை வழிபடுவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம் .
தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற் சோழனும் முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தல வரலாறு கூறுகிறது .
இத்திருக்கோயிலின் சிறப்பம்சம் :
பங்குனி மாதம் 2 3 4 தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது .
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .
தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 165 வது தேவார தலமாகும் .
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வெண்ணி கரும்பேஸ்வரரை வழிபட்டு குணமடையுங்கள் .
Loading ...
- See Poll Result