பஸ் ஸ்டாண்ட் அமைக்க செல் கம்பெனிக்கு டெண்டர்..? – வேலுமணி மீது 400 கோடி ஊழல் புகார்..?

அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராகவும், முன்னனி அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.பி வேலுமணி இவரது துறையின் கீழ் நடைபெற்ற பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடைபெற்றதாக அதிமுக ஆட்சி காலத்திலேயே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர் சோதனை மேற்கொண்டர்.

அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் 3,928 சதவிகிதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி மீண்டும் வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுக தலைமையும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்தநிலையில் பேருந்து நிறுத்தம் அமைப்பதில் 400 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி அறப்போர் இயக்கத்தினர் பரபரப்பு புகார் ஒன்றை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஏற்கனவே பல புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் கூறப்பட்டதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் எஸ் பி வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை பெருநகர மாநகராட்சியில் விதிகளை மீறி பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக 400 கோடி ரூபாய் டெண்டர் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

---- Advertisement ----

போலி நிறுவனங்களுக்கு அந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது நிரூபணமாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும் கருப்பு பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெள்ளை பணமாக்கி மீண்டும் கருப்பு பணமாக்கபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

பேருந்து நிறுத்தம் அமைப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் தற்போது அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் அரசுக்கு 200 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

---- Advertisement ----