ஒரு படத்தைப் பார்ப்பதற்கு முன்பெல்லாம் தியேட்டருக்குச் சென்று மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். அதற்குரிய அறிவிப்பையும் பட வெளியீட்டுக்கு முன்பாக 'ரிசர்வேஷன் ஆரம்பம், இன்று முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது' என்றெல்லாம் விளம்பரப்படுத்தவார்கள். முன்பதிவு செய்வதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது.
ஆனால், கடந்த சில வருடங்களாக ஆன்லைன் முன்பதிவு பரவ ஆரம்பித்தது. அதற்குக் கட்டணத்தையும் வசூலிக்க ஆரம்பித்தார்கள். 10 ரூபாயில் ஆரம்பமான முன்பதிவுக் கட்டணம் இப்போது சத்தமில்லாமல் 40 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, நீங்கள் 5 டிக்கெட் புக் செய்தாலும் 5 டிக்கெட்டுகளுக்கும் தனித் தனியாக முன்பதிவு கட்டணமாக தலா 40 வீதம் 200 ரூபாய் செலுத்த வேண்டும். இதை இணையதள சேவை என வசூலிக்கிறார்கள்.
ஆக, ஒரு படத்திற்கு வெறும் 1 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்தாலே 40 லட்சம் லாபம். நினைத்து பாருங்கள். முன்னணி நடிகர்களின் படங்களை ஆன்லைனில் மட்டும் கோடிக்கணக்கான பேர் புக் செய்கிறார்கள். யோசித்து பார்த்தால் பணம் போட்டு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு கூட இவ்வளவு வருமானம் இல்லை.
இந்தக் கட்டணக் கொள்ளை பற்றி பலரும் பலவிதமாகப் பேசியும் திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இம்மாதிரி கட்டணங்களுக்கு அரசு உடனே வரையறை வைக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
ரயில், பேருந்து ஆகியவற்றில் முன்பதிவு செய்வதற்கு நமக்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. மாறாக தியேட்டர் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இப்படி கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.


