சென்னையில் உள்ள பெசன்ட்நகர் பீச்சில் பிரபல தனியார் தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டை அணிந்து கொண்டு இரண்டு வாலிபர்கள், சிறுவர், சிறுமிகளின் கல்வி சேவைக்கு என்று கூறி அங்கிருந்த பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த பக்கம் வந்த அந்த அதே தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் நன்கொடை வசூலில் ஈடுபட்டிருந்த அந்த வாலிபர்கள் மீது சந்தேகம் அடைந்து அவர்கள் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டார்.
அதனை தொடர்ந்து, அந்த இருவரையும் அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக பின்தொடர்ந்த அருண்குமார், இவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சத்தமின்றி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நன்கொடை வசூலிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், கோடம்பாக்கத்தை சேர்ந்த சைபலிகான் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த கவுதம் என்பதும், கல்வி நன்கொடை என்ற பெயரில் அடிக்கடி பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்து அந்த பணத்தில் குடி கூத்து என சுகபோகமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், விசாரணையில் பிடிபட்ட சைபலிகான் என்பவர். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி மற்றும் பகல்நிலவு போன்ற தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருப்பதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தார்கள்.
Tags
Sembaruthi Serial