நடிகர் சூர்யாவிற்கு கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிங்கம் திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பிறகு, சொல்லிக்கொள்ளும்படி ஹிட் படங்கள் அமையவில்லை.
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மற்றும் சில படங்களில் கெஸ்ட் ரோல் என நடித்து தன்னுடைய நிலையில் இருந்து உயராமல் போனாலும் இறங்கி வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா.
அதிலும், இடையில் வெளியான அஞ்சான் திரைப்படம். சூர்யாவின் சினிமா அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்தது. இந்நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் 'அயன், மாற்றான்' ஆகிய படங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள 'காப்பான்' படத்தை, ஆகஸ்ட் 30ம் தேதியன்று வெளியிடப் போகிறோம் என எப்போதோ அறிவித்துவிட்டார்கள்.
ஆனால், 'சாஹோ' படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 15லிருந்து 30க்கு தள்ளிப் போனதால் 'காப்பான்' படத்தை அந்த நேரத்தில் வெளியிட படக்குழு விரும்பவில்லை. இதனால் ரிலீசில் சிக்கல் உருவானது.
இப்படத்தையும் தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு என பில்லிங்குவல் படமாக மிகப் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருந்த சூழ்நிலையில் 'சாஹோ' வெளியீடும் போட்டியாக வந்தது. இதனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி படத்தை செப்டம்பர் 20-ம் தேதி "காப்பான்" வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.



