எதிர்வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளவுள்ள படத்தை தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.
அதற்காக, தேர்வுக்கு வந்த தமிழ் மொழி உள்ளிட்ட மொத்தம் 28 மொழிப் படங்களில் ஒரு ஹிந்திப் படம் தேர்வு செய்யப்பட்டது. இயக்குனர் சோயா அக்தர் இயக்கிய "கல்லி பாய்" படம் தான் இந்த வருட ஆஸ்கார் விருதுக்காக போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங், அலியா பட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று, 140 கோடி வரை வசூலித்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான 28 இந்தியப் படத் தேர்வில் 'ஒத்த செருப்பு சைஸ் 7, வட சென்னை, சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களும் கலந்து கொண்டன. அபர்னா சென் தலைமையிலான இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பினர் இந்தத் தேர்வைச் செய்துள்ளனர்.
இந்நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் கல்லி பாய் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Tags
Oscar 2020