பிகில் உள்ளிட்ட அனைத்து திரைப்படத்திற்கும், தீபாவளியன்று சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அரசு அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கபடுவதாக ரசிகர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிகில் டிக்கெட் விலை குறித்து கேட்டதற்கு, தீபாவளிக்கு ரிலீசாகும் எந்த படத்திற்கும் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
ஒருவேளை, அதை மீறி சிறப்பு காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அதற்கு அரசு பொறுப்பு ஏற்காது என்றும் அது திரையரங்கம் மற்றும் ரசிகர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அரசு அனுமதிக்காத அந்த நேரங்களில் படத்தை ஒளிபரப்பு செய்தால் அந்த திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக, இரவு 12 மணி காட்சி, 1 மணி காட்சி, 2 மணி காட்சி, 3 மணி காட்சி என பல காட்சிகளை முக்கியமான திரையரங்குகள் ஏற்பாடு செய்து டிக்கெட்டுகளை விற்று தள்ளி விட்டன. இரவே பிகில் படத்தை பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பார் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதா..? என்ன செய்வது..? என திரையரங்குகள் விழி பிதுங்கி நிற்கின்றன.