இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இப்படத்தின் வசூல், ரூ. 100 கோடியை தாண்டியதாக செய்திகள் வந்தாலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதனை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சென்னை ECR-ல் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு செய்தி அதிர்ச்சியடைய வைத்தது.
இதனால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதனை தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர், நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, விஜய் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் விஷயத்தை கூறி வீடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட போலீசார், மிரட்டல் விடுத்த நபர் யார் என்று அவன் அழைத்த தொலைபேசி எண்னை வைத்து வலைவீசி தேடினர்.
இறுதியாக, மிரட்டல் விடுத்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எதற்காக அந்த நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்..? அவருடைய பின்புலம் என்ன..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.