டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த சில பயணிகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக திருதிரு குருகுரு பார்வையுடன் சுற்றி திரிந்தனர்.
அவர்களை அழைத்து மத்திய நிறுவன பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்களில் ஒருவர் கொண்டு வந்த உணவுப் பொருட்களின் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். பின்னர் அவர் கொண்டு வந்த உணவுகளை சோதனை செய்தனர்.
அப்போது, அயன் சூர்யாவை ஓவர் டேக் செய்யும் வண்ணம் அதிகாரிகள் வியக்கும் வகையில் வேர்க்கடலைகளுக்குள் சுருட்டி, மடித்து நூல் போட்டு கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
வேர்கடலைகளுக்குள் பணம் இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எந்த காட்டுல சார் வேர்கடலைக்குள் காசு முளைக்குது என்று கிண்டலடித்தவாரே அவற்றை பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.
வேர்கடைலைக்குள் காசு இருக்கு சரி பிஸ்கட் பாக்கெட்டுல என்னப்பா வச்சி இருக்கீங்க என்று கேட்டு அவர்கள் வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளில் உள்ள பிஸ்கட்டுகளுக்குள் மறைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பணத்தையும் கைப்பற்றினர்.
அந்த நபரிடம் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ரூபாய் எனப்படுகிறது.இது குறித்து அவர்களை மடக்கி பிடித்துவிசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது டெல்லி போலீஸ்.



