அதற்கு நான் பொறுப்பு இல்லை - நடிகர் அஜித் காட்டமான அறிக்கை..!


பல நடிகர்கள் தங்களுடைய படங்களின் விளம்பரத்துக்காக படம் நடிப்பதை தாண்டி அரசியலில் சர்ச்சையான கருத்து ஏதாவது கூறி ஓவர் டைம் வேலை பார்த்து வருகிறார்கள். 
 
சில அரசியல் கட்சிகள் அந்த நடிகர்களை பகடை காயாக பயன்படுத்திக்கொண்டு வருகின்றன. ஆனால், அப்படி தங்களின் தனிப்பட்ட அறிக்கையை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகள் மீது எந்த எதிர்ப்பும் காட்டாமல் கமுக்கமாக இருக்கிறார்கள் அந்த நடிகர்கள்.
 
இதனால், அந்த நடிகர்களை இயக்குவதே குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தானோ என்ற பேச்சு பரவலாக எழுந்து வருகின்றது. இந்நிலையில், சினிமா என்பது என்னுடைய வேலை. அதை தாண்டி எனக்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் கிடையாது. விளம்பர படங்களில் நடிப்பதோ, வேறு எதையாவது பற்றி விளம்பரப்படுத்தும் நோக்கில் பேசுவதோ கிடையாது என்பதை பல இடங்களில் பதிவு செய்து வருகிறார் நடிகர் அஜித்.
 
அந்த வகையில், தற்போது ஒரு தனி நபர்கள் தனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் அவர்களிடம் கவனமாக இருங்கள் என நடிகர் அஜித் குமார் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். 
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர். சினிமா தவிர்த்து வெளியிடங்களில் அவ்வளவாக தலைகாட்டாதவர். சினிமா நிகழ்வுகளோ, ஏன் தன் பட விழாக்களில் கூட பங்கேற்க மாட்டார். 
 
இந்நிலையில் தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக கூறி அஜித் சார்பில் அவரது வக்கில் பரத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாது, நான் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர். அவர் சார்பில் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். 
 
சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர்(அஜித்) சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ அவரின் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. 
 
அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா மட்டுமே அவரின் சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி. தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்தத் தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். 
 
இதை மீறி இத்தகைய நபர்களிடம், தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாகத் தொடர்பிலிருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.