விஜய் டிவி குக் வித் கோமாளி தீபா, உருவ கேலிக்கு எதிராக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் உருவ கேலி மற்றும் நிற வேற்றுமைக்கு பெண்கள் அதிகம் பலியாகிறார்கள்.
இந்தியில் இதை முன் வைத்து பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் சினிமா பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகளை ஊக்குவிக்கிறது என்பதே கசப்பான உண்மை. தீபா ஷங்கரை நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் உருவகேலி குறித்து அவர் முன் வைத்த கடுமையான மற்றும் கண்ணியமான அறிக்கை, நிச்சயமாக மற்றவர்களை கேலி செய்பவர்களை சிந்திக்க வைக்கும்.
அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், பெண்கள் கருத்தரித்த பிறகும், குழந்தை பெற்ற பிறகும் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பதாகக் கூறிய தீபா, அதன் பின்னர் ஏற்படும் மன அழுத்தங்களைப் பற்றி யாரும் பேசாமல் உருவகேலி செய்வதாக குற்றம் சாட்டினார்.
அழகின் தரத்தை தோலின் அமைப்பு மற்றும் நிறத்தால் அளவிடக்கூடாது என்று குறிப்பிட்ட தீபா, "நான் ஒரு அம்மா, என் இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் அல்லது கிளியோபாட்ராவை அனுப்பினால் அவர்கள் அம்மா என ஓடிவரமட்டார்கள்" என்றார்.
அதோடு உருவ கேலி மற்றும் நிற பாகுபாட்டை ஊக்குவிக்க வேண்டாம் என்று சேனல்களையும், திரைப்பட இயக்குநர்களையும் கேட்டுக்கொண்டார். உருவ கேலியை விஜய் டிவி தனது பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், தீபா சங்கர் அதற்கு எதிராக பேசியது நெட்டிசன்களிடம் வரவேற்பைப் பெற்றது.
ஆனால் கடைசியில் அதை பிராங்க் என சொல்லாமல் விட்டிருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.