சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி, இந்திய அணியை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களை மிரட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியை வீழ்த்துவது அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது.
இதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி துபாயில் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் வீரர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர் வீரர்களிடம், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என எச்சரிக்கும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் வீரர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டியதாக செய்திகள் கசிந்துள்ளன.
மோஷின் நக்வியின் இந்த பேச்சு பாகிஸ்தான் வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோஷின் நக்வி, "இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. இந்த போட்டிக்காக எங்கள் அணி வீரர்கள் மிகச்சிறப்பாக தயாராகி இருக்கிறார்கள். எங்கள் வீரர்கள் தற்போது நல்ல பார்மில் உள்ளனர். வெற்றி தோல்வி எது வந்தாலும் நாங்கள் எங்கள் அணி வீரர்களுடன் துணை நிற்போம்" என்று முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
அவரது இந்த கருத்து முந்தைய மிரட்டல் பேச்சுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், இந்திய அணி எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி மற்ற அணிகளை விட முன்னிலையில் இருக்க வேண்டும்.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு இன்றைய போட்டி நாக் அவுட் போட்டிக்கு இணையானது. தலைவர் மிரட்டலா அல்லது ஊக்கமா என குழப்பத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, நெருக்கடியுடன் இன்றைய போட்டியில் இந்தியாவை சந்திக்க உள்ளது.
0 கருத்துகள்