துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி ரசிகர்களுக்கு பரபரப்பான ஆட்டமாக அமைந்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் அடைந்து பாதியில் வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு கவலையை அளித்தது.
போட்டியின் ஆரம்பத்திலேயே முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஷமி தனது முதல் ஓவரை வீச வந்தபோது, அவரால் முன்பு போல் வேகத்தை எட்ட முடியவில்லை.
முதல் ஓவரில் மட்டும் அவர் ஐந்து வைடு பந்துகளை வீசினார். மேலும், அவரது பந்துவீச்சு வேகம் 135 கிலோமீட்டர் வேகத்தை கூட தாண்டவில்லை. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு, முகமது ஷமி தனது முதல் ஸ்பெல்லில் இவ்வளவு குறைந்த வேகத்தில் பந்து வீசுவது இதுவே முதல் முறை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஷமி மனம் தளராமல் அடுத்த ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். அவர் வீசிய மூன்றாவது ஓவரில் 4 ரன்களும், ஐந்தாவது ஓவரில் 3 ரன்களும் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை ஷமி வீசிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டது. உடனடியாக பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டு மைதானத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சில நிமிடங்கள் பரிசோதனை செய்த பிறகு, ஷமி தொடர்ந்து பந்து வீச முடியாத நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். ஷமி வெளியேறியதும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஷமிக்கு பதிலாக ஏழாவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச வந்தார்.
பகுதி நேர பந்துவீச்சாளரான ஹர்திக் பாண்டியா, முக்கியமான இந்த நேரத்தில் பந்து வீசும் பொறுப்பை ஏற்றார். போட்டியின் ஆரம்பத்திலேயே முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டதால், அவர் இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீசுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒருவேளை ஷமி தொடர்ந்து விளையாட முடியாமல் போனால், அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம். முன்னதாக, இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றது.
இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 12வது முறையாக ஒருநாள் போட்டிகளில் டாஸ் தோற்று இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் களம் இறங்கினர்.
ஹர்திக் பாண்டியா வீசிய ஒன்பதாவது ஓவரில் பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.