தோனி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34). கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அவர் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இது தற்கொலை அல்ல கொலை என பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பியதை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் இது திட்டமிட்ட கொலை என தொடர்ந்து கூறி வந்தனர். இந்த விவகாரத்தில் பாலிவுட் திரையுலகில் நிலவும் வாரிசு அரசியல் (நெப்போட்டிசம்), போதைப்பொருள் பயன்பாடு போன்ற பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.
பிரபல கான் மற்றும் கபூர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் சுஷாந்த் சிங்கின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூட கூறப்பட்டது.
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் உடற்கூராய்வை செய்த ரூப்குமார் ஷா என்பவர், அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து பல்வேறு செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி வந்தன.
இதனைத் தொடர்ந்து சிபிஐ, சுஷாந்த் சிங்கின் காதலி என கூறப்பட்ட நடிகை ரியா சக்ரபர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. சுஷாந்த் சிங்கின் தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ரியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ரியா சக்ரவர்த்தி, சுஷாந்தின் நண்பர் சித்தார்த், அவரது சமையல்காரர் நீரஜ் மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோரிடம் சிபிஐ வாக்குமூலம் பெற்றது.
சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா என்பதை அறிய எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா தலைமையில் ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து ரியா சக்ரவர்த்தி ரூ.15 கோடி தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டதாக சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
ஆனால், ரியாவின் மேலாளர் மற்றும் முன்னாள் வீட்டு மேலாளர் ஆகியோரும் விசாரிக்கப்பட்ட நிலையில், ஒரு மாத கால விசாரணைக்கு பிறகு ரியா சுஷாந்திடம் இருந்து பணம் கையாடல் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனிடையே, ரியாவின் செல்போனை சோதனை செய்தபோது போதைப்பொருள் தொடர்பான தகவல் பரிமாற்றம் நடந்திருப்பது சிபிஐக்கு தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷெளவிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சுஷாந்தின் மரணத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியானதை அடுத்து பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ராகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.
ஆனால், இந்த விசாரணைகளில் இருந்து எந்த முக்கிய தகவல்களும் கிடைக்கவில்லை. சுஷாந்தின் தந்தை அளித்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தனது இறுதி அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 22, 2025) சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்ரவர்த்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும், சுஷாந்தின் மரணத்தை கொலை என்று சந்தேகிப்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலை தான் என சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.