நடிகை ஜோதிகா சமீப காலமாக தமிழ் சினிமா குறித்து வெளியிடும் கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. பாலிவுட் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தமிழ் சினிமா ஆணாதிக்க சினிமா.
இங்கு நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஹீரோவை புகழ்வதற்கும், ரொமான்ஸ் செய்வதற்கும், டூயட் பாடுவதற்கும் மட்டுமே ஹீரோயின்களை பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஜோதிகா இவ்வாறு பேசியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்ததற்கு காரணம், அவர் நடித்த பல வெற்றிப் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தை கொண்டவை.
"காக்க காக்க", "சந்திரமுகி", "பேரழகன்", "பச்சைகிளி முத்துச்சரம்", "குஷி", "வாலி" போன்ற படங்கள் இதற்கு சிறந்த உதாரணங்கள். இப்படி இருக்க, தமிழ் சினிமாவின் எதிர்மறை பக்கத்தை மட்டும் ஜோதிகா பேசுவது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தன்னை அடையாளப்படுத்திய, புகழையும் வாழ்க்கையையும் கொடுத்த தென்னிந்திய சினிமாவை பற்றி அவர் நல்லவிதமாக பேசாதது வருத்தமளிக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை சீண்டும் விதமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். வட இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "தமிழ் சினிமா ரசிகர்கள் எந்த படத்தை பார்த்தாலும் விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
நல்ல படங்களை கூட மோசமாக விமர்சனம் செய்கிறார்கள்" என்று அவர் கூறியிருந்தார். இந்த கருத்தை கேட்ட ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். "மும்பையில் செட்டிலாகி விட்டார் என்பதற்காக தென்னிந்தியாவையும், தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?" என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் சினிமாவும் நடிகைகளுக்கு ஒன்றுமே செய்வதில்லை என்ற பிம்பத்தை வட இந்திய ஊடகங்களில் உருவாக்குவது சரியல்ல என்றும் ரசிகர்கள் சாடுகின்றனர்.
சமீபத்தில் வெளியான அவரது "கங்குவா" திரைப்படம் தோல்வியடைந்ததன் காரணமாகத்தான் அவர் இப்படி பேசுகிறாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்புகின்றனர். ஒரு படம் தோல்வியடைந்தால், ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள், நாம் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறோமா என்று யோசிக்காமல், ரசிகர்களை தாக்குவது ஜோதிகா போன்ற நடிகைகளுக்கு அழகல்ல என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.
அவரது சமீபத்திய நடவடிக்கைகள் அவர் வட இந்தியாவை சேர்ந்தவர் போலவே நடந்து கொள்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.