பிரபல நடிகை உமா ரியாஸ் கான், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர், இளம் வயதில் திருமணம் செய்வது குறித்து தனது அனுபவத்தையும், அதிலுள்ள ஆபத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். உமா ரியாஸ் கானின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உமா ரியாஸ் கான் அந்த பேட்டியில் கூறியதாவது, "நாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு. நாங்கள் 21 வயதில் திருமணம் செய்து கொண்டோம். இப்போது நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம்.
ஆனால் திருமணம் செய்த புதிதில் எனக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ரியாஸ் கான் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் எங்களுக்கு நிறைய பண கஷ்டங்கள் இருந்தன. ஒருவருக்கொருவர் ஊக்கம் கொடுத்து மனதை தேற்றிக்கொண்டு தான் வாழ்க்கையை நகர்த்திச் சென்றோம்," என்று தனது திருமண வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்தார்.
மேலும் அவர், "எனவே 21 வயதில் எந்த வேலையும் இல்லாமல், சரியான தொழிலும் இல்லாமல் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. நாங்கள் செய்த தவறை மற்றவர்கள் செய்யக்கூடாது.
இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பண கஷ்டம் வரத்தான் போகிறது என்பதை உணர்ந்து, அதற்காக ஒருவருக்கொருவர் உறுதுணையாக வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் மனப்பக்குவம் இருந்தால், அந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் 21 வயதில் திருமணம் செய்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயம் என்று தான் நான் கூறுவேன். நாங்கள் செய்த தவறை தயவு செய்து யாரும் செய்யாதீர்கள்," என்று தனது அனுபவத்தின் மூலம் இளம் தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
உமா ரியாஸ் கானின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட விவாதங்களை கிளப்பியுள்ளது. இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர் சந்திக்கும் சவால்கள் குறித்தும், பொருளாதார ரீதியாக தயாரான பின்னர் திருமணம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உமா ரியாஸ் கானின் வெளிப்படையான இந்த பேச்சு, இளம் ஜோடிகளுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமைந்துள்ளது எனலாம்.