இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி திரையுலகை உலுக்கியுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், மனோஜ் குறித்த சில வேதனையான உண்மைகளையும், அவர் கடைசியில் என்ன நடந்தது என்பதையும் பகிர்ந்துள்ளார்.
பப்ளிக் விங் யூடியூப் சேனலில் பேசிய வெங்கடேஷ், "சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க மனோஜுக்கு வாய்ப்பு வந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
ஆனால், அதை படப்பிடிப்பில் அவர் காட்டிக்கொள்ளவில்லை. அவருக்கு கிட்னி பிரச்சனை இருந்தது. மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம், வீக்கம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் என பல உபாதைகளை தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டார். தயாரிப்பாளர் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
அப்போதே மனோஜ் சுதாரித்திருக்கலாம். ஆனால், வலிகளை மறைத்துக்கொண்டு படத்தையும் முடித்துக்கொடுத்தார். அதன் பிறகுதான் அவர் மருத்துவமனையில் சீரியஸான நிலையில் அனுமதிக்கப்பட்டார். உடனே ஐசியூவில் சேர்த்தார்கள்.
அப்போது அவருக்கு முதுகு வலியும் வந்தது. அது ஏற்கனவே இருந்த கிட்னி பாதிப்புதான் காரணம். ஒருபக்கம் இதய வலி, மறுபக்கம் கிட்னி பிரச்சனை என இரண்டும் சேர்ந்ததால் டாக்டர்கள் திணறினார்கள். பைபாஸ் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்து, குடும்பத்தினரிடம் நிலைமையை சொல்லி அவர்களின் அனுமதியோடு செய்தார்கள்.
அந்த அளவுக்கு மோசமான நிலைமை. ஆனால், ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து 15 நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டுக்கு வந்தும் மனோஜ் ஓய்வெடுக்க நினைக்கவில்லை. ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலையில் இறங்க முடிவு செய்தார்.
இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு கூட தனக்கு வேண்டிய 5 தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோக்களுக்கும் போன் செய்து பேசியிருக்கிறார். அடுத்த கதை தயாராக இருப்பதால், அதற்கான ஸ்கிரிப்ட் எழுத ஊரிலுள்ள பண்ணை வீட்டுக்கு செல்வதாகவும், ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் தகவல் சொல்வதாகவும் கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர்களும் அவரை நன்றாக ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். ஆனால் மனோஜ் ஸ்கிரிப்ட் எழுதுவதிலேயே உறுதியாக இருந்தார். பண்ணை வீட்டையும் தயார் செய்ய சொல்லியிருந்தார். இதனிடையே மனோஜ் உடல்நிலை தேறிவிட்டதால் பாரதிராஜாவும் ஓய்வெடுக்க வத்தலகுண்டு பண்ணை வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தார்.
இருவரும் ஒரே நாளில், ஆனால் தனித்தனியாக பண்ணை வீட்டுக்கு செல்ல முடிவெடுத்திருந்தார்கள். நாலரை மணிக்கு போனில் ஸ்கிரிப்ட் குறித்து பேசிக்கொண்டிருந்த மனோஜூக்கு 2 மணி நேரத்தில் இறப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு நிறைய சொத்துக்கள் இருந்தாலும், அவர் ஒரே வாரிசாக இருந்தாலும், உடல்நல பாதிப்பு இருந்தபோதும் அவரது எண்ணம் முழுவதும் சினிமாவாகவே இருந்தது. கடைசி பேச்சும் சினிமாவாகவே இருந்தது.
சினிமாவுக்காக தன் உடல், உயிரை விட்டுவிட்டார் மனோஜ். அப்பா, அப்பான்னு எல்லாரும் பாரதிராஜாவை சொல்றாங்க. மனோஜுக்கு யாராவது ஒரு வாய்ப்பை தந்திருக்கலாம். அத்தனை பிரபல நடிகர்களும் மனோஜ் வீட்டை சுற்றித்தான் இருக்காங்க.
தங்கள் படத்தில் ஒரு சின்ன கேரக்டர் கொடுத்திருக்கலாம். கடைசி வரை யாருமே அவருக்கு உதவவில்லை. ஆஸ்பத்திரியில் 15 நாள் இருந்தபோதும் யாரும் போய் பார்க்கவில்லை.
இன்று அவர் இறந்ததும் அத்தனை பேரும் வருகிறார்கள். அதுவும் பாரதிராஜாவுக்காக அஞ்சலி செலுத்த வந்ததாகவே நான் நினைக்கிறேன். சினிமா என்பது எப்போதுமே நிஜம் கிடையாது" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் திண்டுக்கல் வெங்கடேஷ்.