ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் அவரது 25-வது படமாக வெளிவந்துள்ள திரைப்படம் கிங்ஸ்டன். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த திகில் கலந்த பேண்டஸி திரைப்படம், ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
திரைக்கதை சுருக்கம்:
தூவத்தூர் கடல் கிராமத்தில், மீனவர்கள் கடலுக்குச் சென்றால் உயிருடன் திரும்புவதில்லை. 1982-ல் ஆரம்பித்த இந்த மர்மம் தொடரவே, அரசு மீன்பிடிக்க தடை விதிக்கிறது.
கடலில் மூழ்கிய ஆன்மா தான் காரணம் என மக்கள் நம்புகின்றனர். பல வருடங்கள் கழித்து, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) ஒரு படகை வாங்கி கடலுக்குச் செல்ல நினைக்கிறார்.
இதற்காக தாமஸ் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தாமஸ் போதைப்பொருள் கடத்துவதை தெரிந்து விலகுகிறார். அதன் பின், கடலுக்குச் சென்றால் யாரும் உயிரோடு திரும்ப முடியாது என்று தெரிந்தும், நண்பர்களுடன் கடலுக்குள் துணிந்து செல்கிறார் கிங்ஸ்டன். கடலில் என்ன மர்மம்? கிங்ஸ்டன் உயிரோடு கரை திரும்பினாரா? என்பதே மீதிக்கதை.
விமர்சனம்:
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ், வித்தியாசமான கதைக்களம் தேர்வு செய்திருந்தாலும், திரைக்கதையில் அதை சிறப்பாக வடிவமைக்க தவறியுள்ளார். படத்தின் கதை ஆபரேஷன் சக்சஸ் ஆனால் நோயாளி காலி என்பது போல உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் உட்பட அனைத்து நடிகர்களின் நடிப்பும் ஓரளவிற்கு ரசிக்க வைத்தாலும், திரைக்கதை பெரிய ஏமாற்றம். முதல் பாதி சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்தாலும், இரண்டாம் பாதியும் அதே போக்கில் செல்வது சோர்வை ஏற்படுத்துகிறது.
பேண்டஸி கதைகளில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிக்கும்படி இருக்க வேண்டும். ஆனால், இப்படத்தில் வரும் லாஜிக் மீறல்கள் பொறுமையை சோதிக்கின்றன.
கடலில் வரும் ஆவிகளை கட்டையால் அடித்து விரட்டுவது போன்ற காட்சிகள் ஓவர் டோஸ். குழப்பமான எடிட்டிங் படத்திற்கு மேலும் பின்னடைவு. சொல்ல வந்த விஷயத்தை எடிட்டிங்கில் சரியாக கொண்டு சென்றிருந்தால் கூட ரசிக்க வைத்திருக்கலாம். இது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
கடலில் வரும் உயிரினம் மற்றும் அதற்கான பில்டப் காட்சிகள் மட்டும் சிறப்பாக இருந்தன. ஆனால், இறுதியில் அதையும் சப்பென்று முடித்துவிட்டனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்.
ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக கடலில் நடக்கும் காட்சிகளும், வில்லன் creature வடிவமைத்த விதமும் பாராட்டும்படி உள்ளன. VFX இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
பிளஸ்:
- நடிகர்களின் நடிப்பு
- ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம்
- வில்லன் creature வடிவமைப்பு
மைனஸ்:
- சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை
- குழப்பமான எடிட்டிங்
- லாஜிக் மீறல்கள்
- சுமார் ரக VFX
மொத்தத்தில், கிங்ஸ்டன் - திரைக்கதை கடலில் மூழ்கியது!