"குட் பேட் அக்லி" படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் மைத்திரி மூவிஸ் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி (Good Bad Ugly - GBU) திரைப்படம் இன்று (ஏப்ரல் 10, 2025) வெளியாகியுள்ளது. 

அஜித்தின் தீவிர ரசிகராக அறியப்படும் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், ரசிகர்களுக்கு ஒரு மாஸ் மசாலா படையலாக அமைந்துள்ளதா? இதோ ஒரு விரிவான பார்வை.

கதைக்களம் - ஒரு கேங்ஸ்டரின் உணர்ச்சி பயணம்

இப்படத்தில் அஜித் ஒரு சக்தி வாய்ந்த கேங்ஸ்டராக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ஒட்டுமொத்த இந்தியாவையே நடுங்க வைக்கும் அளவுக்கு பயமுறுத்தும் தோற்றத்தில் தொடங்குகிறது. 

ஆனால், அவரது குற்ற வாழ்க்கை அவரது குடுமபத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனால், த்ரிஷா அவரது மனைவி, பிறந்த குழந்தையை அவருக்கு காட்ட மறுக்கிறார். 

இதையடுத்து, தன் குடும்பத்திற்காக போலீஸிடம் சரணடைந்து திருந்த முடிவு செய்யும் அஜித், 17 ஆண்டுகள் கழித்து தன் மகனை சந்திக்க வருகிறார். 

ஆனால், அங்கு அர்ஜுன் தாஸ், அவரது மகனை ஏதோ ஒரு காரணத்திற்காக சிக்க வைக்க, அஜித் மீண்டும் தன் பழைய "பேட்" அவதாரத்திற்கு மாறுகிறார். தன் மகனை சிறையிலிருந்து மீட்க அஜித் எடுக்கும் முயற்சிகளே படத்தின் மீதிக்கதை.

அஜித்தின் ஒன் மேன் ஷோ

குட் பேட் அக்லி முழுக்க முழுக்க அஜித் குமாரின் திரை ஆளுமையை சுற்றி நகர்கிறது. ஒரு நல்ல அப்பாவாக எல்லோரையும் கலாய்த்து ஜாலியாக இருக்கும் அவர், தன் மகனுக்காக மீண்டும் கேங்ஸ்டராக மாறும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் தருணங்கள். 

குறிப்பாக, இடைவேளையில் "பேங் ஆ, மொட்டையா" என்ற காட்சி, மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தின் மாஸ் தருணங்களில் ஒரு மறக்க முடியாத இடத்தை பிடிக்கிறது. 

இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள், டான் லீ, ஜான் விக் போன்ற ஹாலிவுட் படங்களின் தாக்கத்துடன், அஜித்தை ஒரு உலகத்தரம் வாய்ந்த கதாநாயகனாக உயர்த்திக் காட்டுகின்றன.

நட்சத்திர பட்டாளம் - ஆனால் அஜித் மட்டுமே ஹைலைட்

த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இடம்பெற்றாலும், அவர்களது பங்கு பெரும்பாலும் அஜித்தை பில்டப் செய்யவே உள்ளது. 

அர்ஜுன் தாஸ் ஒரு வில்லனாக அஜித்திற்கு சவால் விடுவதாக தோன்றினாலும், அவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான எதிரியாக அமைகிறது. 

சிம்ரனின் எதிர்பாராத நுழைவு மற்றும் அதை ஆதிக் கையாண்ட விதம் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு. ஆனால், மற்ற நடிகர்களுக்கு திரையில் பெரிய அளவில் வெளிப்படுத்த வாய்ப்பு குறைவு.

ஆதிக் ரவிச்சந்திரனின் பாணி

ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் ரசிகர் என்ற முறையில், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து படமாக்கியுள்ளார். படம் முழுவதும் அஜித்தை மையப்படுத்திய ரெபரன்ஸ்கள், பழைய பாடல்கள், மாஸ் மொமெண்ட்ஸ் என ரசிகர்களை கத்த வைக்கும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த அதீத ரசிகர் சேவையில் சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது. பழைய பாடல்கள் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் ஒரு கட்டத்திற்கு மேல் "போதும்" என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. 

மேலும், படத்தில் லாஜிக் தேடுபவர்களுக்கு இது ஏமாற்றமாகவே இருக்கும், ஏனெனில் கதையில் பல இடங்களில் லாஜிக் கழற்றி வைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள்

படத்தின் ஒளிப்பதிவு பெரும்பாலும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது, ஆனால் சில காட்சிகள் மிகவும் மங்கலாக இருப்பது கேள்வியை எழுப்புகிறது. 

இசை ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தாலும், பின்னணி இசையின் சத்தம் சற்று ஓவர் டோஸாக உள்ளது. சண்டைக் காட்சிகள் மற்றும் மாஸ் மொமெண்ட்ஸ் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், சில இடங்களில் அதீத சத்தம் சலிப்பை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில்...

குட் பேட் அக்லி ஒரு அஜித் ரசிகரால் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படம் என்பதில் சந்தேகமில்லை. 

அஜித்தின் மாஸ் தோற்றம், பிளாஷ்பேக் காட்சிகள், சண்டைகள் என ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் ஆதிக் படத்தில் திணித்துள்ளார். இருப்பினும், லாஜிக் இல்லாத கதை, அதீத சத்தம், மற்றும் சில சலிப்பூட்டும் தருணங்கள் படத்தின் பலவீனங்களாக உள்ளன. 

மொத்தத்தில், இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்து என்றால் மிகையல்ல.

Fans Rating

Tamizhakam Rating

Post a Comment

Previous Post Next Post