இந்திய அரசு சமீபத்தில் புதிய ஆதார் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஆதார் அட்டையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஒரு பெரிய முன்னேற்றமாகும். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ஆப்பை ஏப்ரல் 8, 2025 அன்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், பயனர்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஃபேஸ் ஐடி (முக அடையாள சரிபார்ப்பு) மற்றும் QR கோடு பயன்படுத்தி எளிதாகவும் பாதுகாப்பாகவும் சரிபார்க்க முடியும்.
இனி ஆதார் அட்டையின் புரோட்டோகாபி அல்லது அசல் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆப், யுனிக் ஐடென்டிஃபிகேஷன் ஆஃப் இந்தியா (UIDAI) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை முழுமையாக கட்டுப்படுத்தலாம். தேவையான தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் அது பயனரின் சம்மதத்துடன் மட்டுமே பகிரப்படும். "யு.பி.ஐ பரிவர்த்தனை போல ஆதார் சரிபார்ப்பு இனி எளிதாக இருக்கும்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இது பயணம், ஹோட்டல் செக்-இன், கடைகள் போன்ற இடங்களில் ஆதார் நகலை சமர்ப்பிக்கும் தேவையை நீக்குகிறது. தற்போது இந்த ஆப் பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது.
ஆதார் சம்வாத் நிகழ்ச்சியில் பதிவு செய்தவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு விரிவாக்கப்படும்.
இதன் மூலம் தரவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, ஆதார் தொடர்பான மோசடிகளும் தடுக்கப்படும். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இது ஒரு முக்கிய படியாகும்.