தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 9, ஜூன் 2025 இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி மாற்றப்பட்டு, நடிகர் சிம்பு (சிலம்பரசன் டிஆர்) புதிய தொகுப்பாளராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, பிக் பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
அவரது தொகுப்பு பாணி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, சிம்பு பிக் பாஸ் சீசன் 9ஐ தொகுக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு ஏற்கனவே ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற ஓடிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள், “சிம்புவுக்கு 9 என்றாலே பிரச்சனை தான், இதுல 9வது சீசனை தொகுக்கப் போகிறாரா?” என்று நையாண்டியாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு தரப்பு ரசிகர்கள், சிம்புவின் தனித்துவமான பாணி நிகழ்ச்சிக்கு புத்துணர்வு சேர்க்கும் என எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றனர். பிக் பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சி விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.