பிரபல தமிழ் நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும், தனது அரசியல் ஆசை குறித்தும் காரசாரமாக பேசியது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைய விருப்பம் தெரிவித்த அவர், ஒருவேளை தான் அரசியலில் ஈடுபட்டால் ஊட்டி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட ஆசைப்படுவதாகவும், அதற்கான காரணங்களையும் விவரித்தார்.
வாணி போஜன் கூறுகையில், விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிப்பவர்கள், அவர் ஒரு நடிகர் என்பதை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். ஆனால், நடிகராக இருப்பது அரசியலுக்கு வருவதற்கு தடையல்ல என்றும், அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
மேலும், தனது அரசியல் நோக்கம் குறித்து பேசிய அவர், ஊட்டியைச் சேர்ந்த படுகை இன மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
இவர்களை வெள்ளந்தியான, அமைதியான மக்களாக வர்ணித்த அவர், அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும், தன்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார்.
இதனால், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், ஊட்டி தொகுதியை தேர்வு செய்வேன் என்று உறுதியாக தெரிவித்தார். வாணி போஜனின் இந்த கருத்துகள் அவரது சமூக அக்கறையையும், ஊட்டியை பூர்வீகமாகக் கொண்ட படுகை இனத்தைச் சேர்ந்தவராக தனது மக்களுக்கு சேவை செய்யும் உறுதியையும் பறைசாற்றுகின்றன.
இது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல், அரசியல் ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் கட்சியில் அவர் இணைவாரா, ஊட்டியில் போட்டியிடுவாரா என்பது குறித்து வரும் நாட்களில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.