தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் (75), மாரடைப்பால் சென்னையில் இன்று (மே 29, 2025) உயிரிழந்தார்.
1974-ல் கே. பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘கன்னிப் பருவத்திலே’, ‘அந்த 7 நாட்கள்’, ‘மகாநதி’, ‘விருமாண்டி’ உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகன், குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், ‘ஓம் சரவண பவ’ யூடியூப் சேனல் மூலம் ஆன்மிகம், ஜோதிடம் குறித்து பகிர்ந்து, ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தார்.
சமீபத்திய பேட்டியில், ராஜேஷ் தனது சினிமா மற்றும் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்தார். “சினிமாவை விட்டு ரியல் எஸ்டேட் துறைக்கு மாறியபோது, சிலர் எனது முடிவை வரவேற்றனர்.
ஆனால், கமல்ஹாசன் போன்றவர்கள், ‘நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள், சினிமாவுக்கு உங்கள் பங்களிப்பு முக்கியம்,’ எனக் கூறினர். நான் எனது கடமைகளை விளக்கியபோது, கமல், ‘நீங்கள் நடிகராகவோ, இயக்குநராகவோ சாவதை விட, பணக்காரராக சாகனும்,’ என அறிவுறுத்தினார்,” என்று கூறினார்.
மேலும், “சிகரெட், மது, பெண்கள் சம்பந்தமான பழக்கங்களுக்கு பயந்ததால், ஒழுக்கமாக வாழ்ந்தேன். இதை ஒழுக்கம் என்று சொல்வதைவிட, பயமே என்னை வழிநடத்தியது,” என வெளிப்படையாகப் பேசினார்.
ராஜேஷின் திடீர் மறைவு, திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது சகோதரர், “காலை 6 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபோது, சித்த மருத்துவரின் தாமதத்தால் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.
இது மரணத்திற்கு காரணம்,” எனக் குற்றஞ்சாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.