தமிழ் சினிமாவில் புதிய தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள ஆகாஷ் பாஸ்கரன், டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் கவனம் பெற்றுள்ளார்.
சினிமா தயாரிப்பு என்பது எப்போதும் நிச்சயமற்ற ஒரு துறை. ஒரு படம் வெற்றியடைந்தால், அடுத்த படம் தோல்வியடையலாம் என்பதால், பல பழமையான தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படத்தை முடித்து, அதன் வெற்றியைப் பொறுத்து அடுத்த படத்தை தயாரிக்கும் முறையை பின்பற்றுகின்றன.
ஆனால், ஆகாஷ் பாஸ்கரன் ஒரே நேரத்தில் நான்கு பெரிய பட்ஜெட் படங்களை அறிவித்து, தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகமானது. ஆகாஷ் முதல் படமாக தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தை அறிவித்தார்.
இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி என்ற படத்தை அறிவித்தார், இது ரூ. 150 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும், சிம்புவின் 49-வது படம் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இதயம் முரளி ஆகிய படங்களையும் அவர் தயாரிக்கிறார்.
ஒரே நேரத்தில் இத்தனை பெரிய படங்களை ஒரு புதிய நிறுவனம் தயாரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நிறுவனமான லைகா கூட ஆரம்பத்தில் ஒரு படம் மட்டுமே தயாரித்து வந்தது.
ஆனால், ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், ஆகாஷ் எவ்வாறு இத்தனை படங்களை தயாரிக்க முடிகிறது என்ற கேள்வி எழுந்தது. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்? சேலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகனான ஆகாஷ், இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக நானும் ரவுடிதான், பாவக்கதைகள், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பணியாற்றினார்.
சமீபத்தில் அவர், கவின் கேர் நிறுவனர் சி.கே. ரங்கநாதனின் மகள் தாரணியை திருமணம் செய்தார். தாரணியின் தாய் தேன்மொழி, மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பேத்தி ஆவார். இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஆனால், ஆகாஷின் இந்த வேகமான சினிமா பயணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் வெற்றி பெறும் படங்கள் மிகக் குறைவு என்ற நிலையில், ஒரே நேரத்தில் ரூ. 500 கோடி மதிப்பிலான படங்களை தயாரிப்பது எப்படி சாத்தியம்?
இதற்கிடையே, மே 16, 2025 அன்று அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் திடீர் சோதனை நடத்தியது. இது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சிலர், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பிலிருந்து விலகிய நேரத்தில் ஆகாஷின் நிறுவனம் அறிமுகமாவது தற்செயலாக இருக்க முடியாது என்கின்றனர்.
ரெட் ஜெயண்ட் மூலம் தயாரிப்பது பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்துவதால், டான் பிக்சர்ஸ் ஒரு பினாமி நிறுவனமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ரெட் ஜெயண்ட் என்றால் சூரியனை குறிக்கும், அதே போல Dawn என்பதும் விடியற்காலையில் உதிக்கும் சூரியனை குறிக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது என்பது காட்டுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
மேலும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அறிவுப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த சோதனையும், ஆகாஷின் பின்னணியும் தமிழ் சினிமாவில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன. சினிமா தயாரிப்பில் நிதி முதலீடு எங்கிருந்து வருகிறது என்பது தொடர்ந்து கேள்வியாகவே உள்ளது.
ஆகாஷ் பாஸ்கரனின் இந்த பயணம், தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்குமா அல்லது சர்ச்சைகளை மட்டுமே ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.