தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த கு. அண்ணாமலை, சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு பாரதிய ஜனதா கட்சியில் (BJP) தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய், தனது எக்ஸ் பதிவில், அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தருண் விஜய் தனது பதிவில், “இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற திருக்குறள் 517-ஐ மேற்கோள் காட்டி, அண்ணாமலையின் தலைமைப் பயணம் சிறக்க வாழ்த்தினார்.
மற்றொரு எக்ஸ் பதிவில், “பாஜகவில் மொத்தம் 12 தேசிய பொதுச் செயலாளர்கள் மட்டுமே உள்ளனர். அண்ணாமலைக்கு இந்தப் பொறுப்பு அல்லது மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பேசப்பட்டது,” என @PadmanabhanNaga குறிப்பிட்டார்.
இருப்பினும், அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் பாஜக தலைமையில் இருந்து வெளியாகவில்லை. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூன் 27, 2025 அன்று, அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்றும், அதேநேரம் தமிழ்நாடு அரசியலில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் கூறியிருந்தார்.
மேலும், ஏப்ரல் 2025-ல், அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியபோது, அவரது சிறப்பான பணியை ஷா பாராட்டி, தேசிய அளவில் அவரது திறமைகள் பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை, 2021 முதல் தமிழ்நாடு பாஜக தலைவராக பணியாற்றியபோது, கட்சிக்கு புதிய இளைஞர் ஆதரவைப் பெற்றுத் தந்தார். 2023-ல் அதிமுகவுடனான கூட்டணி முறிவுக்கு அவரது ஆக்ரோஷமான அரசியல் பாணி காரணமாக கருதப்பட்டது.
தற்போது, மதுரையில் நடந்த முருக பக்தர் மாநாடு உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
தருண் விஜயின் பதிவு, ரசிகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதால், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.