சென்னை: கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, தனது குடும்ப நண்பர் மற்றும் பயிற்சி வழக்கறிஞரின் உதவியுடன் தைரியமாக காவல்நிலையத்தில் புகார் அளித்து, பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி நீதி பெறுவதற்கு போராடி வெற்றி பெற்றுள்ளார்.
இதன் விளைவாக, குற்றவாளியான ஞானசேகரன் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடங்கியபோது, இது 2026 சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒரு அரசியல் ஆயுதமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை பெண்கள் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினையுடன் இணைத்து தங்களது தேர்தல் வியூகத்தை வகுத்து வருகின்றன. அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பயனர் பெயரை மாற்றி இந்த விவகாரத்தில் தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆட்சி அமைந்தால், இந்த சம்பவத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் சார்கள், ஞானசேகரனை காப்பாற்றிய சார்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள்” என்று கூறி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இதேபோல், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, இந்த வழக்கில் மேலும் ஆழமான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்.
அவர், ஞானசேகரன் தொலைபேசியை பயன்படுத்தி முதலில் ஒரு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு செய்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். “ஒரு குற்றவாளி எதற்காக காவல்துறை அதிகாரிக்கு முதலில் போன் செய்கிறான்?” என்ற அவர், இந்த அழைப்பின் பின்னணியில் உள்ள தொடர்புகளை வெளிப்படுத்தி, அடுத்தடுத்து பல உண்மைகளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவின் செய்தி சேனலாக கருதப்படும் நியூஸ் ஜே, பரபரப்பான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பேச்சைத் தூண்டியுள்ளது. அமெரிக்காவில் பலான பெண்களுடன் அமைச்சர் மற்றும் அவரது பாதுகாவலர் உல்லாசம் “யார் அந்த சார்கள்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம், அமெரிக்காவில் ஒரு அமைச்சர் மற்றும் அவரது பாதுகாவலர் பல பெண்களுடன் உல்லாசத்தில் இருப்பதாக குறிப்பிடுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வைரலாகி, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு அப்பால் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள், இந்த சம்பவத்தை பெண்கள் பாதுகாப்பு என்ற பிரச்சினையுடன் இணைத்து திமுக அரசை குற்றம் சாட்டி வருகின்றன.
அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் பாஜகவின் விசாரணைக் கோரிக்கைகள், 2026 தேர்தலில் இதனை மையமாக வைத்து அரசியல் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மறுபுறம், ஆளும் திமுக தரப்பு, இவை அரசியல் அவதூறுகள் மட்டுமே என்று பதிலடி கொடுத்து வருகிறது. தங்களது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை புறக்கணித்து அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள மறைமுக தொடர்புகள் குறித்து ஆளும் கட்சியின் பதிலடி என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
2026 தேர்தலில் பெண்கள் பாதுகாப்பு மையமாக அமையும் நிலையில், இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் மேலும் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.